களத்திற்கு வருவது ஒன்றும் புதிதல்ல கண்ணா.. மீனவர்களுக்காக குரல் கொடுக்கும் விஜய்..
TV9 Tamil News September 20, 2025 09:48 PM

நாகை, செப்டம்பர் 20, 2025: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், நாகை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்காக இன்று, அதாவது செப்டம்பர் 2025 தேதியான இன்று காலை, சென்னையில் இருந்து தனியார் விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். வழியிலேயே அவருக்கு மக்கள் தரப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்திலிருந்து கார் மூலம் பயணம் மேற்கொண்ட தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், பின்னர் பிரச்சார வாகனத்தில் ஏறி பரப்புரை நடைபெறும் இடத்திற்குச் சென்றார். கடந்த முறை திருச்சியில் நடைபெற்ற தவறுகள் நடைபெறாதவாறு பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, மக்கள் பரப்புரை வாகனத்தை சூழாமல் இருக்க இருபுறமும் கயிறுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

அதே சமயம், தமிழக வெற்றி கழகத் தொண்டர்களுக்கும் பல்வேறு நிபந்தனைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, பிரச்சார வாகனத்தை பின்தொடரக்கூடாது என்றும், பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என்றும், மின்கம்பங்கள் மற்றும் மரங்களில் ஏறக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாகை திருவாரூரில் பரப்புரை:

செப்டம்பர் 2025 தேதியான இன்று, விஜய் நாகை மற்றும் திருவாரூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். முதலில் காலை நாகையில் பிரச்சாரம் மேற்கொண்டு, பிற்பகல் 3 மணி அளவில் திருவாரூர் மாவட்டத்தில் அவர் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.’

மேலும் படிக்க: விஜய் பிரச்சாரம் பயணத்தில் மாற்றம்.. செப். 27 சென்னையில் பிரச்சாரம் இல்லை..

நாகை மாவட்டத்தில் விஜயின் பிரச்சாரத்திற்காக, நாகூர் புதிய பஸ் நிலையம், வேளாங்கண்ணி ஆர்ச், புத்தூர் ரவுண்டானா, அபிராமி அம்மன் சன்னதி, அவுரி திடல், கேள்வி ரவுண்டானா, காடம்பாடி மைதானம் ஆகிய ஏழு இடங்களில் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால், புது ரவுண்டானா கிழக்கு கடற்கரை சாலையில் விஜய் பிரச்சாரம் செய்வதற்காக போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

மீனவர்களுக்காக குரல் கொடுக்கும் விஜய்:

அண்ணா சிலை அருகே, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரப்புரையில் ஈடுபட்டார். ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ இப்ப நான் எந்த மண்ணில் நின்றுட்டு இருக்கேன் தெரியுமா? கடல் தாய் மடியில் இருக்கக்கூடிய, மனதிற்கு நெருக்கமான நாகையில் இருக்கிறேன். என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் மீனவ நண்பனாக அன்பு வணக்கங்கள்.

எங்கு திரும்பினாலும் உழைக்கும் மக்கள் இருக்கக்கூடிய ஊர் தான் நாகைப்பட்டினம். மத வேறுபாடு இல்லாமல், அனைவருக்கும் பிடித்துப் போன மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக வாழ்கின்ற மக்களுக்கு வணக்கங்கள்.

தமிழகத்தில் மீன் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் இருக்கக்கூடியது நாகை தான். ஆனால் மீன் பதப்படுத்தக்கூடிய நவீன தொழிற்சாலைகள் கிடையாது. அடிப்படை வசதிகள் கூட இல்லாமல், இந்த முன்னேற்றத்திற்கெல்லாம் எங்கள் ஆட்சி தான் சாட்சி என அடுக்குமொழியில் பேசி பேசி காதில் இருந்து ரத்தம் வந்தது தான் மிச்சம்.

மக்கள் இப்படி தவிக்கிறார்களே, அது பத்தாதா? இலங்கை கடற்படையால் மீனவர்கள் தாக்கப்படுவதும் குறித்து, இலங்கையில் பேசி இருந்தது தப்பா? நான் 14 ஆண்டுகளுக்கு முன்னர், 2011 பிப்ரவரி 22ஆம் தேதி, மீனவர்களுக்காக பொதுக்கூட்டத்தை நடத்தினேன்.

இந்த விஜய் களத்திற்கு வருவது ஒன்று புதிதல்ல கண்ணா. இப்போது தமிழக வெற்றிக்கழகம் என்ற ஒரு அரசியல் கழகமாக வந்து நிற்கிறோம். அவ்வளவுதான் வித்தியாசம். இது புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி!” என பேசியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.