கோயிலைச் சுற்றியுள்ள சாலையை சீரமைத்த மக்கள்; டிராக்டர் பறிமுதல்! சாலை மறியல்!
Dhinasari Tamil September 20, 2025 11:48 PM

கோயிலைச் சுற்றியுள்ள சாலையை சீரமைத்த மக்கள்; டிராக்டர் பறிமுதல்! சாலை மறியல்! Dhinasari Tamil %name%

மதுரை, உசிலம்பட்டி அருகே பெருமாள் கோவில் செல்லும் பாதையை சரி செய்வதற்கு மண் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்வதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திடீர்சாலை மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எருமார்பட்டி கிராமத்தின் அருகில் அமைந்துள்ள இந்து அறநிலை துறைக்கு சொந்தமான பழமையான பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

இந்நிலையில் , 16 ஆண்டுகளுக்குப் பின் பால் அபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் கோவிலை சுற்றி உள்ள பகுதி குண்டும் குழியுமாக உள்ளதால் அதனை சரி செய்வதற்கு கிராம மக்கள் டிராக்டர் மூலம் அருகில் உள்ள ஓடைகளில் மண்ணை அள்ளி சரி செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வருவாய் துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து, கோவில் திருப்பணிக்கு மண் அள்ளிய டிராக்டர் வாகனத்தை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் எழுமலை- உசிலம்பட்டி செல்லும் நெடுஞ்சாலையில் எருமார்பட்டி என்ற இடத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த எழுமலை போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதுபோன்ற கோவில் திருப்பணிக்கு அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் எனவும், இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து வாகனம் பறிமுதல் செய்யப்படாது என கூறியதைத் தொடர்ந்து ,
கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.

இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோயிலைச் சுற்றியுள்ள சாலையை சீரமைத்த மக்கள்; டிராக்டர் பறிமுதல்! சாலை மறியல்! News First Appeared in Dhinasari Tamil

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.