தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. இதனைத் தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் போதைப்பொருள் விற்பனை செய்த நான்கு என்ஜினீயர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை சூளைமேடு வீரபாண்டி நகர் பகுதியில், இரவு நேரத்தில் ஒரு கும்பல் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் படி தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு மாறுவேடத்தில் அந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் இரண்டு வாலிபர்கள் போதைப்பொருள் விற்பனை ஈடுபட்டனர். அவர்களை கையும் களவுமாக பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த போதைப்பொருளான மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள், சூளைமேட்டை சேர்ந்த பாப்பிஸ்ட், லாரன்ஸ் என்பது தெரிய வந்தது. அவர்களைக் கைது செய்த போலீசார் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஈரோட்டை சேர்ந்த டென்னீஸ் டிசோசா, ரெனீத் ஆகியோரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் என்ஜினீயரிங் பட்டதாரிகள் என்பதும், அவர்கள் வேலை கிடைக்காத நிலையில், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.