திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவிந்தபாளையம் பகுதியில் இருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் ஜெயக்குமார் என்பவர் ஏறியுள்ளார். இதையடுத்து மது போதையில் இருந்த ஜெயக்குமார் பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தகராறு செய்திருக்கிறார். இதனால் ஜெயக்குமாரை எஸ்ஆர்சி எனும் பேருந்து நிறுத்தத்தில் நடத்துனர் மோகன்ராஜ் இறக்கி விட்டுள்ளார்.
இதன் காரணமாக கோபமடைந்த ஜெயக்குமார் ஒரு கல்லை எடுத்து குறிப்பிட்ட பஸ் கண்ணாடியின் மீது வீசியுள்ளார். இதில் பஸ்ஸின் முன்பக்கமாக அமர்ந்திருந்த இளம் பெண்ணின் தலைமீது கல் விழுந்துள்ளது. அதுமட்டுமின்றி கண்ணாடித் துகள்கள் பட்டு அப்பெண் படுகாயமடைந்தார். அதனைத்தொடர்ந்து சக பயணிகள் ஜெயக்குமாரை பிடித்துத் தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இவ்வாறு மது போதையில் வாலிபர் பஸ் கண்ணாடியை உடைத்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.