ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண் நந்தனத்திலுள்ள தனியார் ஆடிட்டர் நிறுவனத்தில் பணி செய்து வந்தார். இவருக்கு ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த கணேஷ்ராம் என்பவருடன் இன்ஸ்டாகிராம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதில் என்ஜினீயரிங் பட்டதாரியான கணேஷ்ராம் திரை துறையில் இயக்குனராக முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் இளம்பெண் கணேஷ் ராம் தங்கியுள்ள அறைக்கு சென்றுள்ளார். அங்கு அவர்கள் இருவரும் ஒன்றாக மது குடித்ததோடு இறைச்சி சமைத்து சாப்பிட்டுள்ளனர்.
அதன்பின் இளம் பெண்ணுக்கு திடீரென வாந்தி ஏற்பட்டதால் கழிவறைக்கு சென்றார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த இளம் பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனால் பதறிப்போன கணேஷ்ராம் காவல்துறையினருக்கு தகவலளித்தார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இளம் பெண்ணின் இறப்பில் மர்மம் இருப்பதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கணேஷ்ராமனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவை வைத்து அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர்.