இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான குழு நாளை (செப்டம்பர் 22) அமெரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ளது.
இந்த பயணத்தின் போது, அமெரிக்கா விதித்துள்ள 50% வரி, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட H-1B விசா கட்டண உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. குறிப்பாக, H-1B விசா கட்டணத்தை $100,000 (ரூ.88 லட்சம்) ஆக உயர்த்தும் அமெரிக்காவின் முடிவு, இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இது முக்கிய அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது.
பியூஷ் கோயல் இந்த பயணத்தில், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்தி, விரைவில் ஒரு சாதகமான ஒப்பந்தத்தை எட்ட வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாகும்.
ஏற்கனவே பியூஷ் கோயல், “இந்தியா-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தைகள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றன” என்று தெரிவித்துள்ளார். கடந்த வாரம், அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை குழு டெல்லியில் இந்திய அதிகாரிகளை சந்தித்து விவாதித்தது. அந்த சந்திப்பு மிகவும் ஆக்கபூர்வமானதாக இரு தரப்பும் தெரிவித்தன.இந்த சந்திப்பின் தொடர்ச்சியாகவே பியூஷ் கோயல் அமெரிக்கா செல்கிறார்.