'நாட்டில் புதுமைகளை படைக்க வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப வேண்டும்' என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.' இந்திய திறமைசாலிகளை பார்த்து பயம் வந்துவிட்டது. இதில் நமக்கு ஆட்சேபனை இல்லை. நாம் தான் வெற்றியாளர்கள்' என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்கான 'எச்1பி' விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலராக, அதாவது இந்திய மதிப்பில் 88 லட்சம் ரூபாயாக உயர்த்தி அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இது, இந்தியர்களை பணி அமர்த்திய நிறுவனங்களுக்கு அவசரநிலையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ள மற்றும் விடுமுறைக்கு சென்றுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறியுள்ளதாவது: உலகில் உள்ள பல நாடுகள் இந்தியாவுடன் வரியற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்ய விரும்புகின்றன என்றும், அந்நடுகள் இந்தியாவுடன் வர்த்தகத்தையும், உறவையும் அதிகரிக்க விரும்புகின்றதாகவும், அவர்கள் நமது திறமைசாலிகளை பார்த்து பயப்படுகின்றனர். எங்களுக்கு அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறியுள்ளார்.
அத்துடன், இந்திய திறமைசாலிகள் தாயகம் திரும்பி புதுமைகளை படைக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். நாம் தான் வெற்றியாளர்கள். முதல் காலாண்டில் வளர்ச்சி 7.8 சதவீதமாக இருக்கிறது என்றும், இது அனைத்து பொருளாதார நிபுணர்களின் கணிப்புகளையும் தாண்டியுள்ளதாக பேசியுள்ளார். மேலும், இந்த பொருளாதார வளர்ச்சி 2047 வரை தொடரும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வீடியோவில் கூறியுள்ளார்.