'ஜி.எஸ்.டி. 2.0' அமல் : இன்று முதல் குறையும் பொருட்களின் விலை..!
Top Tamil News September 22, 2025 04:48 PM

பூஜ்ஜிய வரி

• மாணவர்கள் பயன்படுத்தும் பென்சில், ரப்பர்கள், மேப்-புகள் ஆகியவை பூஜ்ஜிய வரிக்கு வந்து விட்டதால் அதன் விலை குறைந்துள்ளது.

• இது தவிர சோப்புகள், டூத் பேஸ்ட், ஷாம்புகள், தலைக்கு தேய்க்கும் எண்ணெய்கள் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக மாறி இருப்பதால் குறைந்தது ரூ.6.50-ல் இருந்து ரூ.40 வரை விலை குறைந்துள்ளது. சராசரியாக 10 சதவீதம் வரை பொருட்களுக்கு ஏற்ற விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

• துணிமணிகள் ஏற்கனவே இருக்கும் 5 சதவீத வரியில் மாற்றம் இல்லையென்றாலும் ரூ.2,500 மேல் இருக்கும் ஆடைகள் 12 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. அதே போல் குல்ட் மெத்தைகள் போன்றவையும் வரி உயர்ந்து உள்ளதால் அதன் விலைகள் அதிகரித்துள்ளது.

• வீட்டு உபயோகத்திற்கு பெரிதும் தேவையான சமையல் மற்றும் சாப்பாட்டு பாத்திரங்கள் பானைகள், குக்கர், தட்டுகள், கரண்டிகள், வாணலி, டவா, அடுப்பு, கிண்ணங்கள், கண்ணாடிகள், கத்தி, மேசை கரண்டி, ஸ்பூன் வகைகள் ஆகியவற்றில் பெரும்பாலும் 12, 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்திற்கு வந்து விட்டதால் விலை குறைந்து உள்ளது.

கட்டுமான பொருட்கள்

• சைக்கிள்கள் 12, 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்திற்கு வந்து விட்டதால், சராசரியாக ஒரு சைக்கிளுக்கு விலைக்கு ஏற்ப ரூ.1,000 முதல் ரூ.3,500 வரை குறைந்து விட்டது.

• கட்டுமான பொருளான சிமெண்ட் வரி 28-ல் இருந்து 18 ஆக மாறி இருப்பதால் மூடைக்கு ரூ.40 வரை குறைகிறது. அதே நேரத்தில் கம்பிகள் ஏற்கனவே இருக்கும் 18 சதவீதத்தில் இருப்பதால் அதன் விலையில் மாற்றம் இல்லை.

• சிகரெட், புகையிலை, ஆடம்பர கார்கள் ஆகியவற்றின் வரி 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் ஆகி விட்டதால் அதன் விலை எல்லாம் அதிகரிக்கும்.

குறையும் கார்கள் விலை

• ஆடம்பர கார்களை தவிர 1,200 சி.சி.க்கும் குறைவாக உள்ள கார்கள் அனைத்தும் விலை குறைக்கப்பட்டு உள்ளது. அதன் வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளதால் அதன் விலைக்கு ஏற்ப விலை குறைவு இருக்கிறது. அதாவது ரூ.65 ஆயிரம் முதல் ரூ.3½ லட்சம் வரை கார் விலை குறைகிறது.

• 350 சி.சி.க்கு உட்பட்ட மோட்டார் சைக்கிள் வரி 28-ல் இருந்து 18 ஆக குறைந்து விட்டது. அதனால் அதன் விலை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கு ஏற்கனவே இருந்த 5 சதவீத வரி தற்போதும் தொடர்வதால் அதில் எந்த மாற்றமும் இல்லை.

• மருத்துவ உபகரணங்கள், தெர்மாமீட்டர்கள், நோய் கண்டறியும் கருவிகள், ரத்த சர்க்கரை கண்டறியும் கருவிகள், சில மருந்துகள், மாத்திரைகள் ஆகியவை 18 மற்றும் 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் அதன் விலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது.

• மக்கள் பயன்படுத்தும் மூக்கு கண்ணாடிகள், லென்சுகள் ஆகியவை 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்திற்கு வந்துள்ளதால் பெரிய விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ரூ.1,000 ஆக இருந்தால் இப்போது அதன் விலை சராசரியாக 25 சதவீதம் அளவுக்கு குறைந்து ரூ.750 ஆகி உள்ளது.

அத்தியாவசிய உணவுப்பொருட்கள்

• 18 சதவீதம் இருந்த ரெடிமேட் பரோட்டா, 5 சதவீதத்தில் இருந்த சப்பாத்திக்கும் வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. அதனால் அதன் விலை ஒன்றுக்கு 50 பைசா முதல் ரூ.5 வரை குறைகிறது.

• சாக்லெட்டுகள், பாஸ்தா, ரெடிமேட் நூடூல்ஸ் ஆகியவை 5 சதவீதத்திற்கு வந்துள்ளதால் அதன் விலையும் கணிசமாக குறைகிறது.

• பன்னீருக்கு இருந்த 5 சதவீத வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளதால், ஒரு கிலோ பன்னீர் விலை ரூ.300 ஆக இருந்தால் ரூ.15 குறைந்து விடுகிறது. அதே போல் நெய், வெண்ணெய் போன்ற பொருட்களுக்கு இருந்த 12 சதவீத வரி 5 ஆக குறைக்கப்பட்டு உள்ளதால், அதன் விலையும் குறைகிறது. உதாரணமாக ஒரு கிலோ நெய்-வெண்ணெய் ரூ.600 விற்பனை செய்யப்பட்டால் ரூ.40 குறைந்து ரூ.560 ஆகிறது.

• உலர் பழங்கள், நொறுக்குத்தீனி மீதான ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்திற்கு வந்து விட்டதால் விலை குறைக்கப்பட்டு உள்ளது. மக்களின் வீட்டு உபயோக பொருட்களான ஏ.சி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ‘32 இன்ச்’-க்கு மேல் உள்ள டி.வி.க்கள், ‘டிஷ் வாஷர்’ ஆகியவை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீத வரிக்குள் வந்து விட்டது. இதனால் இந்த பொருட்களின் சராசரி விலையில் இருந்து 10 சதவீதம் குறைகிறது. உதாரணமாக ரூ.40 ஆயிரம் விற்ற ஏ.சி., இப்போது ரூ.4 ஆயிரம் குறைந்து ரூ.36 ஆயிரம் ஆகி இருக்கிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.