“பல வருஷ தவம்”… காரில் ஒன்றாக சென்ற 4 தோழிகள்… சாலையில் நடந்த பயங்கரம்… கனவு நனவான 10 நாளில் ஆசிரியை மரணம்…!!!!
SeithiSolai Tamil September 22, 2025 06:48 PM

தமிழகத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,715 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு, அவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான பயிற்சி தொடக்க விழா நேற்று காலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க, விழுப்புரம் தனலட்சுமி கார்டன் மூவேந்தர் நகரைச் சேர்ந்த ஜெகதீசனின் மனைவி சிவரஞ்சனி, திருச்சி பாலகரை மல்லிகைபுரத்தைச் சேர்ந்த நெகர்நிஷா, கடலூர் மாவட்டம் நல்லாத்தூரைச் சேர்ந்த கவுசல்யா, கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணியந்தல் பகுதியைச் சேர்ந்த பூவிழி ஆகிய ஆசிரியைகள் ஒன்றாகச் செல்ல முடிவு செய்தனர்.

இவர்களுடன் நெகர்நிஷாவின் கணவர் ஷாகுல் அமீது , கவுசல்யாவின் கணவர் எல்லப்பன், பூவிழியின் கணவர் முருகன் ஆகியோரும் சென்றனர். காரை கடலூர் மாவட்டம் பண்டசோழநல்லூரைச் சேர்ந்த சூர்யா ஓட்டினார். நேற்று அதிகாலை 4.30 மணியளவில் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வாடகை காரில் சென்னைக்கு புறப்பட்டனர். விழுப்புரம் அய்யூர்அகரம் என்ற இடத்தில் அதிகாலை 5 மணியளவில் கார் சென்று கொண்டிருந்தபோது, மேம்பால பணிகள் நடைபெற்று வந்ததால், டிரைவர் சூர்யா காரை எதிர்திசையில் மாற்று வழியில் இயக்கினார். அப்போது, சென்னையில் இருந்து திருச்சிக்கு சிமெண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி மீது கார் நேருக்கு நேராக மோதியது.

இந்த பயங்கர விபத்தில், காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஷாகுல் அமீது மற்றும் ஆசிரியை சிவரஞ்சனி ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் நெகர்நிஷா, கவுசல்யா, பூவிழி, எல்லப்பன், முருகன் மற்றும் கார் டிரைவர் சூர்யா ஆகிய 6 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேரடி நியமனம் மூலம் ஆசிரியர் கனவு நனவாகி 10 நாள்களே ஆன நிலையில், சிவரஞ்சனி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் உருவாக்கியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.