தெலுங்கானா மாநிலம் யாதாத்ரி மாவட்டம், புவனகிரி அருகே அடகுதூரைச் சேர்ந்த சங்கர், மனைவி மஞ்சுளா (35), இரு மகன்களுடன் வேலைக்காக சில மாதங்களுக்கு முன்பு மும்பை குடிபெயர்ந்தார். இதனிடையே,சங்கர் கூலி வேலை செய்ய, மஞ்சுளா வீடுகளில் வேலை பார்த்தார்.ஆனால், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த சங்கர், அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
இந்த விரக்தியடைந்த மஞ்சுளா, 14ஆம் தேதி ஹைதராபாத் அனுபூரில் உள்ள தங்கை ராணி வீட்டில் தஞ்சமடைந்தார்.இதைத் தொடர்ந்து,சங்கரும் அங்கு சென்று, பெரியவர்கள் முன்னிலையில் சமரசம் செய்து, “இனி மனைவியை தொந்தரவு செய்ய மாட்டேன்” என்று உறுதியளித்தார்.
ஆனால், அந்த வாக்குறுதி நீண்டுநிற்கவில்லை. நேற்று முன்தினம், ராணி மற்றும் அவரது கணவர் வேலைக்காக வெளியே சென்ற நிலையில், சங்கர், மஞ்சுளா, குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்தனர்.அந்த இரவு, சுமார் 11 மணியளவில் தூக்கத்தில் இருந்து எழுந்த சங்கர், சமையலறையிலிருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்தார்.
ரத்த வெள்ளத்தில் மஞ்சுளா அங்குத் துடித்தார். சில நிமிடங்களில் அநியாயமாக உயிரிழந்தார்.இதைத் தொடர்ந்து மனைவி இறந்ததை உறுதிப்படுத்திய சங்கர், கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.அடுத்த நாள் காலை எழுந்த குழந்தைகள், தாய் உயிரில்லாமல் கிடப்பதை கண்டு பரிதவித்து கதறினர்.
உடனே அக்கம் பக்கத்தினர் காவலருக்கு தகவல் தெரிவித்தனர்.அங்கு விரைந்து வந்த காவலர்கள் மஞ்சுளாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.மேலும், கொலைக்காரன் சங்கரை பிடிக்க தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.