சென்னை, செப்டம்பர் 21, 2025: விஜயை பார்க்க வரும் கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது. இது விஜய்க்கு மட்டுமல்ல, எல்லா தலைவர்களுக்கும் பொருந்தும். ஏன், எனக்கும் பொருந்தும் என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அரசியல் களம் சூடு பிடித்து வருகிறது. குறிப்பாக, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், செப்டம்பர் 20, 2025 அன்று நாகை மற்றும் திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து அவர் திமுக அரசை கடுமையாக விமர்சித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பல்வேறு கேள்விகள் எழுப்பியும் பிரச்சாரம் நடத்தி வருகிறார். இதேபோல் வருகிற செப்டம்பர் 27, 2025 அன்று நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். தமிழக வெற்றிக்கழகம் தனது முதல் தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறது.
விஜயை பார்க்க வரும் கூட்டம் ஓட்டாக மாறாது – கமல் ஹாசன்:தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது முழுநேர அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாக அவர் பிரச்சாரம் செய்யும் இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரளுகின்றனர். பெரும் கூட்டம் ஏற்படுவதால் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. இது தொடர்பாக கமல்ஹாசன் பேசியதாவது, “சினிமாவுக்கு வந்தால் ‘நன்றாக நடிக்கிறான்’ என்பார்கள்; ‘இவன் எப்படி நடிகராகப் போகிறான்?’ என்றும் நடிக்கும் போதே விமர்சிப்பார்கள். அதுபோல், ஒரு நடிகர் அரசியலுக்கு வந்தாலும் விமர்சனங்கள் முன்வைக்கப்படும்.
மேலும் படிக்க: விஜய் முதலில் தேர்வு எழுதி பாஸ் ஆகட்டும்.. அப்போது சொல்கிறேன் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்..
விஜயைப் பார்க்க வரும் கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது. அது எல்லா தலைவர்களுக்கும் பொருந்தும். எனக்கும் பொருந்தும். இந்தியாவிலுள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் பொருந்தும். கூட்டம் சேர்ந்துவிட்டால் அது எல்லாம் ஓட்டாக மாறாது,” என்றார்.
விஜய் நல்ல பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும்:மேலும், “தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நல்ல பாதையில் செல்ல வேண்டும். தைரியமாக முன்னேறுங்கள். மக்களுக்காகச் செய்யுங்கள். இது எல்லா அரசியல்வாதிகளுக்கும் வைக்கக்கூடிய வேண்டுகோள் தான். வெறும் நாட்டு மக்களுக்காக இருந்தாலும் அதைத்தான் சொல்லி இருப்பேன்.
மேலும் படிக்க: எந்த நோக்கமும் இல்லாமல் கட்சியை தொடங்கி எம்.பி ஆகிவிட்டார் கமல்; தொண்டர்களின் நிலை என்ன? – தமிழிசை சௌந்தராஜன்
நாட்டு மக்களாக எங்களையும் கொஞ்சம் பாருங்கள், எங்களின் முன்னேற்றத்திற்காக வேலை செய்யுங்கள். எந்த இடத்தில் கொண்டு போய் வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் உங்களை வைப்போம் என மக்கள் சொல்கிறார்கள். அதைத்தான் நானும் சொல்கிறேன்,” எனக் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.