உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த ஷாநவாஸ் மற்றும் ரேஷ்மா தம்பதிகள், கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணம் நடந்தது முதலே வரதட்சணை தொடர்பான முரண்பாடுகள் 2 குடும்பங்களுக்கும் இடையே தீவிரமாக தொடர்ந்தன.
இதில் ஷாநவாஸின் வீட்டார் கேட்ட போதெல்லாம், ரேஷ்மாவின் பெற்றோர் பணம் கொடுத்து வந்தாலும், அவர்கள் பேராசை குறையவில்லை. அண்மையில், ரேஷ்மாவின் மாமியார் ரூ.5 லட்சம் கூடுதல் வரதட்சணை கோரிய நிலையில், பெண் வீட்டார் ரூ.1.5 லட்சமே வழங்கினர். இதனால் கொந்தளித்த மாமியார், ரேஷ்மாவை தினமும் துன்புறுத்தி வந்தார்.
இந்நிலையில் சண்டை உச்சம் சென்றபோது, மாமியார் அதிர்ச்சியூட்டும் செயலில் ஈடுபட்டார். அங்கு ரேஷ்மாவை ஒரு அறைக்குள் அடைத்து, கதவை பூட்டி, சிறிய துளை வழியாக ஒரு விஷப்பாம்பை உள்ளே விட்டார். திடீரென பாம்பு நடமாடியதை கண்டு பதற்றமடைந்த ரேஷ்மா முழு இரவும் தப்பிக்கப் போராடினார்.
ஆனால் எச்சரிக்கையின்றி பாம்பு ரேஷ்மாவை கடித்தது. வலியால் அலறித் துடித்த அவரைக் கண்டு, கதவுக்குப் பின் நின்ற மாமியார் கை தட்டி சிரித்துக் கொண்டிருந்தார். உதவி கேட்டும் கதவைத் திறக்க மறுத்தார்.இதில் வலி தாங்க முடியாமல் தவித்த ரேஷ்மா எப்படியோ செல்போனில் தன் தங்கை ரிஸ்வானாவுக்கு அழைத்து கொடூர சம்பவத்தை தெரிவித்தார்.
இதனால், பதறிய ரிஸ்வானா உடனே வந்து அக்காவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்.இதையடுத்து இந்தக் கொடூரத்துக்கு காரணமான கணவன் ஷாநவாஸ், மாமியார் மற்றும் அவரது உறவினர்கள் மீது கொலை முயற்சி வழக்கில் காவல் குற்றப்பத்திரிகை பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.