Ind vs Pak: போராடித் தோற்ற பாகிஸ்தான்; மீண்டும் கைகுலுக்காமல் சென்ற இந்திய வீரர்கள்
Vikatan September 23, 2025 12:48 PM

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றுவரும் ஆசிய கோப்பை தொடரில், சூப்பர் 4 சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேற்று (செப்டம்பர் 21) மோதின.

ஏற்கெனவே செப்டம்பர் 14-ம் தேதி லீக் சுற்றில் இரு அணிகளும் மோதியபோது, வெற்றிபெற்ற இந்திய அணி வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்கமல் சென்றது பெரும் விவாதமாக வெடித்தது.

இந்தியா vs பாகிஸ்தான் - டாஸ்

இந்த நிலையில், நேற்று இரவு 8 மணியளவில் போட்டி தொடங்கியது.

முன்னதாக டாஸின்போது, லீக் போட்டியைப் போலவே இரு அணிகளின் கேப்டன்களும் கைகுலுக்காமல் சென்றனர்.

டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்தது.

நல்ல தொடக்கம் அமைந்தும் நடுவில் சறுக்கிய பாகிஸ்தான்!

பாகிஸ்தான் அணிக்கு ஃபக்கர் ஜமான் விக்கெட் தொடக்கத்திலேயே விழுந்தாலும், ஃபர்கான், சைம் அயூப் கூட்டணி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு நல்ல அடித்தளமிட்டது.

ஆனால், 11-வது ஓவரில் சைம் அயூப்பை ஷிவம் துபே விக்கெட் எடுத்ததும் பாகிஸ்தானின் ரன் வேகம் குறைந்தது.

பாகிஸ்தான் வீரர் விக்கெட்

அரைசதமடித்த ஃபர்கானும் 58 ரன்களில் அவுட்டாக இரண்டாம் பாதியில் இந்திய பவுலர்கள் ஆட்டத்தை தங்கள் பக்கம் கொண்டு வந்தனர்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது பாகிஸ்தான்.

அதிரடி ஓப்பனிங்... நிதான ஃபினிஷிங்!

அதைத்தொடர்ந்து, 172 ரன்கள் என்ற இலக்கை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற நோக்கில் இறங்கிய அபிஷேக் சர்மா, சுப்மன் கில் முதல் ஓவரிலிருந்தே அதிரடியாக ஆடினர்.

ரன்ரேட் 10-க்கு கீழ் செல்லாமல் பார்த்துக்கொண்டு இந்தக் கூட்டணியில் அபிஷேக் சர்மா அரைசதம் அடிக்க, 9 ஓவர்களிலேயே 100 ரன்களைக் கடந்தது இந்தியா.

அபிஷேக் சர்மா, சுப்மன் கில்

அரைசதத்தை நெருங்கி கொண்டிருந்த கில் அடுத்த ஓவரிலேயே 47 ரன்களில் அவுட்டானார்.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதற்கடுத்த ஓவரிலேயே 0 ரன்னில் அவுட்டானார். அதன்பின்னர் இந்தியாவின் ரன் வேகமும் மெதுவானது.

திலக் வர்மா

அடுத்தடுத்து இரண்டு மூன்று ஓவர்களில் அபிஷேக் ஷர்மாவும் (74), சஞ்சு சாம்சனும் (13) அவுட்டானாலும் நிதானமாக ஆடிய திலக் வர்மா 19-வது ஓவரில் வின்னிங் ஷாட் 4 அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தார்.

லீக் போட்டியைப் போலவே இப்போட்டியிலும் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்கவில்லை.

5 சிக்ஸ், 6 ஃபோருடன் 74 ரன்கள் அடித்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருது வென்றார்.

Dunith Wellalage: தந்தைக்கு நேற்று இறுதியஞ்சலி; இரவோடு இரவாக ஆசிய கோப்பைக்கு திரும்பிய இலங்கை வீரர்!
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.