தெலுங்கானாவின் சூர்யாபேட்டை மாவட்டம், பாலகவீடு மண்டலத்தில் உள்ள டெக்கான் சிமெண்ட் தொழிற்சாலையில் திங்கட்கிழமை, பீகாரில் இருந்து வந்த தொழிலாளர்கள் போலீசாரை தாக்கிய கடுமையான சம்பவம் நிகழ்ந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளரொருவர் காயம் அடைந்து, மிர்யலகுடா மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் உயிரிழந்தார். இதை தொடர்ந்து அவரது சக தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய போது, போலீசார் அதை கலைக்க முயற்சி செய்தனர்.
ஆனால் போராட்டம் முற்றியதால், போலீசாருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. சமூக ஊடகங்களில் வெளியாகிய வீடியோவில், தொழிலாளர்கள் போலீசாரை தடியால் விரட்டி தாக்கும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தெலுங்கானா காவல்துறைக்கு பெரிய சவாலாக அமைந்துள்ளது.
இதற்கு முன்னர், மஹாராஷ்டிராவின் பீவாண்டியில் பிப்ரவரி மாதம், POCSO வழக்கை விசாரிக்க சென்ற போலீசாரை 40-50 பேர்களைக் கொண்ட கூட்டம் தாக்கிய சம்பவமும் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறு, தொழிலாளர் பிரச்சனைகள் மற்றும் சமூக பதற்றங்கள் அதிகரித்து, போலீசாரை நேரடி தாக்குதலுக்குள்ளாக்கும் சம்பவங்கள் தொடர்வது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.