ஜிஎஸ்டி விலை குறைப்பால் ஒரு சிமெண்ட் மூட்டையின் விலை 30 ரூபாய் வரை குறைந்துள்ளது.
ஒன்றிய அரசு கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியால் பல்வேறு துறையினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். தொடர்ந்து இந்த ஜிஎஸ்டியை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வழுத்து வந்தது. இந்நிலையில் தான் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு ஒன்றிய அரசின் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி 2.0 என்ற முறையில் பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை முறைப்படுத்தி அறிவித்தார். 8 ஆண்டுகளுக்குப் பிறகு காலதாமதமான முறையில் ஜிஎஸ்டி வரி குறைப்பு என்று விமர்சனங்கள் இருந்தாலும் இந்த வரிக்குறைப்பு வரவேற்பையும் பெற்றது.
இந்நிலையில் தான் இந்த வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக கட்டுமான துறையினரையும் கட்டுமான பொருட்கள் விற்பனையாளர்களையும் பொதுமக்களையும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிய சிமெண்ட் மூட்டைக்கு ஜிஎஸ்டி 28 சதவீதமாக இருந்த நிலையில் ஜிஎஸ்டி 2.0 வில் 18 சதவீதமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று முதல் சிமெண்ட் மூட்டையின் விலைகள் கணிசமாக குறைந்துள்ளது. குறிப்பாக ஒரு சிமெண்ட் மூட்டை 330 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஒரு மூட்டைக்கு 30 ரூபாய் குறைந்து 300 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இதனால் கட்டுமான துறையில் உள்ளவர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குறிப்பாக ஜிஎஸ்டி வருவதற்கு முன்பு பன்னிரெண்டரை சதவீதம் வாட் வரி சிமெண்ட் மூட்டைக்கு கொடுத்து வந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியால் ஒரு சிமெண்ட் மூட்டைக்கு 28 சதவீதம் வரியை செலுத்தி வந்ததாகவும் தொடர்ந்து இந்த ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று கட்டுமானத்துறையில் உள்ள பலரும் பொதுமக்களை ஒன்றிணைத்து போராட்டத்திலும் ஈடுபட்டு வந்த நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி குறைப்பு செய்துள்ளதாகவும் இது காலதாமதமான அறிவிப்பாக இருந்தாலும் தற்போது இந்த ஜிஎஸ்டி குறைப்பு கட்டுமான துறையில் உள்ள பலருக்கும் அதேபோல் வீடுகள் கட்டி வரும் பொது மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் இந்த ஜிஎஸ்டி விலை குறைப்பால் கட்டுமான துறையில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் பலர் வீடு கட்ட முன் வருவார்கள் இந்த ஜிஎஸ்டி விலை குறைப்புக்கு காரணமாக உள்ள மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் கட்டுமான துறையினர் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் இனி வரக்கூடிய காலங்களில் இதேநிலை தொடர வேண்டும் இதற்கு மேலும் வரியை ஏற்றக்கூடாது என்றும் கோரிக்கையும் எடுத்துள்ளனர்.