தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில், வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (30) என்பது கொல்லப்பட்டவரின் பெயர். இவர் எலக்ட்ரீசியன். தற்போது குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெற்று வரும் தசரா திருவிழாவிற்காக, விரதம் மேற்கொண்டு, மாலை அணிந்து பக்தியில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்காக திருச்செந்தூர் நகரம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, தோப்பூர் விலக்கு அருகே மர்ம நபர்கள் மூன்று பேர் வழிமறித்துள்ளனர். பின்னர் அரிவாளால் அவரை வெட்டத் தொடங்கினர். அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் அருகில் இருந்த மரக்கடைக்குள் ஓடி தஞ்சம் புக முயன்றார். ஆனால், தாக்கியவர்களும் அவரைப் பின் தொடர்ந்தும் கடுமையாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொடூரச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மணிகண்டனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா படங்களை விசாரணைக்கு பயன்படுத்திய போலீசார், குற்றம் காதல் தொடர்பான தகராறிலிருந்து எழுந்ததென்பதை உறுதி செய்தனர். இதில், குறித்த பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் மூவர் சேர்ந்து இந்த கொலையை செய்தது தெரியவந்துள்ளது.
மேலும் இது தொடர்பாக திருச்செந்தூர் தாலுகா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகளை விரைவில் பிடிக்க நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.