சென்னையில் பேருந்து, புறநகர் மின்சார ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் சேவைகளை ஒரே டிக்கெட்டில் பயன்படுத்தும் புதிய திட்டம் இன்று செம். 22-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
பொது போக்குவரத்து பயன்பாட்டை எளிதாக்கும் நோக்கத்தில், ‘கும்டா’ (சென்னை யூனிபைடட் மெட்ரோபொலிடன் டிரான்ஸ்போர்ட் அதாரிட்டி) குழுமம், தனியார் நிறுவனத்தின் உதவியுடன் புதிய ஞமென்பொருளை உருவாக்கியுள்ளது. இதன் அடிப்படையில் ‘சென்னை ஒன்’ என்ற புதிய மொபைல் செயலி தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியின் மூலம் பயணிகள், தாங்கள் செல்ல விருக்கும் இடம் மற்றும் பயண வழித்தடங்களை முன்கூட்டியே தேர்ந்தெடுத்து, தேவையான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். பின்னர் அவர்களது மொபைல் போனில் கியூ.ஆர். குறியீடு கொண்ட டிக்கெட் வழங்கப்படும். இந்த டிக்கெட்டை காண்பித்து மாநகரப் பேருந்துகள், புறநகர் ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பயணிக்க முடியும்.
சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்த நிலையில், இந்த செயலி செப்டம்பர் 22-ம் தேதி அதாவது இன்று முதல் பயணிகளுக்குப் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் இந்த புதிய சேவையை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.