உடலின் ஒவ்வொரு உறுப்பும் முக்கியமானதாக இருக்கிறது என்பது அனைவரின் நம்பிக்கையும் உண்மையும் கூட. ஆனால், அதைத் தவிர்த்தும் சாதிக்க முடியும் என்பதற்கான சான்றாக நெதர்லாந்தில் வசிக்கும் 26 வயதான கியோ ஆல்பர்ஸ் திகழ்கிறார். பிறப்பிலேயே இரு கைகளிலும் கட்டை விரல்கள் இல்லாமல் பிறந்த கியோ, சீனாவில் இருந்து நெதர்லாந்துக்கு தத்தெடுக்கப்பட்டு சென்றார்.
View this post on Instagram
A post shared by Qiaodi Aalbers (@aalbersqiaodi)
பள்ளியில் பிற மாணவர்கள் வித்தியாசமாக பார்த்ததாலும், கட்டை விரல் இல்லாத நிலையால் ஏற்பட்ட ஒட்டுமொத்த தனிமையாலும், குழந்தைப் பருவம் சிரமமாகவே கடந்தது. ஆனால் அதையெல்லாம் தாண்டி, இன்று கியோ ஒரு சமூக ஊடக பதிவாளர் மற்றும் ஆங்கில ஆசானாக திகழ்கிறார். “Thumbs are optional” என்று நக்கலாகவும் நம்பிக்கையுடனும் கூறும் அவர், கட்டை விரல் இல்லாமலேயே வெற்றிகரமாக எப்படிச் சிக்கலான செயல்களையும் செய்கிறார் என்பதை அவரது டிக்டாக் வீடியோக்கள் வழியாக உலகம் பார்க்கிறது.
பாட்டில்களை திறப்பது, ப்ரிங்கிள்ஸ் டின்னில் கை வைப்பது, பூச்செண்டை தூக்கும் சாமர்த்தியம் என அனைத்தும் அவரது வீடியோக்களில் வியப்பையும் வினோதத்தையும் ஏற்படுத்துகின்றன. கோமாளித்தனத்தோடு தனது சவாலான வாழ்க்கையை சமாளிக்கிற கியோ, “கடவுள் எனக்கு கொடுக்க வேண்டிய இரண்டு விரல்களையும் அவரே வைத்துக்கிட்டார்” என நகைச்சுவையாக சொல்கிறார்.
ஒரு வீடியோவில், “இது வாழ்க்கையை சுமையாக உணர்வதற்கான காரணம் இல்ல, நான் இதை வாழ்க்கையை ரசிக்க ஒரு வாய்ப்பா எடுத்துக்கிறேன்” என கூறுகிறார். இவரது நேர்மை, தைரியம் மற்றும் நம்பிக்கையோடு வாழ்க்கையை நோக்கும் முறை, அனைவருக்கும் ஓர் ஊக்கமாக மாறியுள்ளது. ஒரு உறுப்பின் குறைபாடு வாழ்க்கையை முடிவாக்காது, அதை எப்படி அணுகுகிறோம் என்பதே வெற்றியின் வழியென்ற உண்மையை கியோவின் கதையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.