திருச்சியில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கார்மல் கார்டன் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டது. அந்த பாதாள சாக்கடையில் உள்ள அடைப்பை சரி செய்வதற்காக ஒப்பந்த தொழிலாளர்களான சின்ன சேலத்தை சேர்ந்த பிரபு மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த ரவி ஆகிய இருவரும் இன்று மாலை பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது பிரபு தடுமாறி பாதாள சாக்கடைக்குள் கீழே விழுந்துள்ளார். தொடர்ந்து அவரை காப்பாற்றும் முயற்சியில் ரவி என்பவர் பின் தொடர்ந்து இறங்கி உள்ளார். அப்போது இருவரும் பாதாள சாக்கடைக்குள்ளேயே மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் திருவெறும்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது அதன் அடிப்படையில் வந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த இருவரையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த திருவரம்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.