நெல்லை, கங்கைகொண்டான் அருகிலுள்ள ஆலடிப்பட்டியைச் சேர்ந்தவர் பிரித்திகா. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பெயிண்டரான அன்புராஜ் என்பவரும் காதலித்து வந்தனர்.
இருவரும் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்றாலும், மாப்பிள்ளை வீட்டாரைப் பெண் வீட்டாருக்குப் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
பின்னர் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2023-ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தில் தனியாக வாழ்ந்து வந்தனர். ஆனால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு ஏற்பட்ட பிரச்னையில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். பின்னர் பெரியவர்கள் சமாதானம் செய்து வைத்ததையடுத்து கடந்த மே மாதம் முதல் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 20-ம் தேதி இரவில் மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பிரித்திகாவின் தாயார் இருவரின் வாழ்க்கையில் தலையிட்டதாகவும், தகராறிற்கும் அவர்தான் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
இருவருக்கும் இடையிலான வாக்குவாதத்தில் அன்புராஜ், பிரித்திகாவின் கழுத்தை சால்வையால் நெரித்துள்ளார்.
அத்துடன் சமையலறையில் இருந்த கத்தியால் பிரித்திகாவின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு நெல்லை புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கிருந்து கோவில்பட்டிக்கு பேருந்தில் சென்றுள்ளார்.
அன்புராஜின் வீட்டு வாசலில் ரத்தக்கறை இருந்ததை பார்த்து சந்தேகித்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். சத்தம் இல்லாததால் நெல்லை சந்திப்பு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கூறியுள்ளனர்.
வீட்டின் பூட்டை உடைத்த போலீஸார் உள்ளே சென்று பார்த்ததில் பிரித்திகா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார்.
அன்புராஜை போலீஸார் தேடினர். ஆனால், அவர் தலைமறைவானார். தன் தம்பிக்கு போன் செய்த அன்புராஜ், பிரித்திகாவை கொலை செய்த விவரத்தைக் கூறியுள்ளார்.
அன்புராஜ்ஜின் தம்பி, அவருக்கு அறிவுரை கூறி போலீஸில் சரணடையச் சொல்லியுள்ளார். பின்னர் மனம் மாறிய அன்புராஜ் நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
அவர், போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், “நானும் என் மனைவியும் காதல் திருமணம் செய்து கொண்டோம். திருமணமான முதலே எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. என் தாய், தந்தை, தம்பியிடம் பேசக்கூடாது எனச் சொன்னதால் சில காலம் அவளை பிரிந்து வாழ்ந்தேன். பின்னர் சமாதானமாகி மீண்டும் சேர்ந்து வாழ்ந்தோம். அப்போது என் மனைவியின் குடும்பத்தினர் இரண்டு லட்சம் ரூபாய் பணம் கொடுத்தனர்.
அந்தப் பணத்தில் என் மனைவியின் மனப் பிரச்னைக்குக் கேரளாவில் சிகிச்சை அளித்தேன். அதன் பிறகும் இரவு நேரங்களில் காரணமே இல்லாமல் என்னிடம் தகராறு செய்து வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்தேன்.
என் மாமியாரின் பேச்சைக் கேட்டதால் மீண்டும் காரணமே இல்லாமல் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. கோபத்தில் காய்கறி வெட்டும் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தேன்” எனச் சொல்லி போலீஸாரை அதிர வைத்துள்ளார்.
திருச்செந்தூர்: சிறுமியுடன் பழகிய இளைஞர்; ஓட ஓட விரட்டி கொன்ற சகோதரன்; பின்னணி என்ன?