காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில், பாஜக அரசின் வாக்கு திருட்டுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் பேருந்து நிலையம் அருகே கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு கையெழுத்திட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து செல்வப்பெருந்தகை கூறும்போது, "பாஜக அரசுக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து பெறப் போகிறோம். இரண்டு கோடி கையெழுத்து பெறுவதற்கு லட்சியமாக வைத்துள்ளோம். எல்லா திருட்டையும் முடித்துவிட்டு வாக்குகளை திருட வந்துவிட்டார்கள். உங்களுடைய வாக்கை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
ஜிஎஸ்டி வரி குறைத்ததால் மக்களுக்கு பயன் என்பது அபத்தமான பொய். மக்களை ஏமாற்றலாம் என நினைக்கிறார்கள். மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் விவரமானவர்கள். குழந்தைகளுக்கு எந்த மொழி தேவையோ, அதை அவர்கள் படித்துக் கொள்வார்கள். அதை யாரும் திணிக்க வேண்டாம். சென்னை தி.நகரில் இந்தி பிரச்சார சபா இருக்கிறது. அதை யாராவது பூட்டினார்களா?
புதிய கல்விக் கொள்கையில் செருப்பு தைப்பவன் செருப்பு தைக்க வேண்டும். முடி வெட்டுபவன் முடி வெட்ட வேண்டும்" என்று சொல்கிறார்கள். இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இது தான் பிரச்சனை. இதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம். மக்களுடைய வரிப்பணம் தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய பணம். இவர்கள் யார் எங்களுக்கு தரமாட்டோம் என அதிகாரம் செய்வது?
உண்மையில் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் இந்த அரசு இயங்குகிறதா? இந்த ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் பரப்புரை செய்யலாம் மற்றும் கருத்து சொல்லலாம். தமிழ்நாடு அரசிற்கு என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், விஜய்க்கு சுதந்திரம் கொடுங்கள். அவரை சுதந்திரமாக விட்டு விடுங்கள். அவர் பிரச்சாரம் பண்ணட்டும். அவர் பேசட்டும். என்ன பேசுகிறார் என்று பார்க்கலாம்.
காங்கிரஸை விஜய் விமர்சிக்கவில்லை என்று சொல்கிறார்கள். எங்களை விமர்சிப்பதற்கு ஒன்றுமில்லை. நாங்கள் தமிழ்நாடு மற்றும் மத்தியில் ஆளுங்கட்சியாக இல்லை. அண்ணாமலை - டிடிவி தினகரன் சந்திப்பு இயற்கைக்கு முரணான கூட்டணி. தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி அதிமுக-பாஜக கூட்டணி. எத்தனை பேர் ஒற்றுமையாக இருக்கிறோம், ஒற்றுமையாக இல்லை என்று சொன்னாலும் அது நிராகரிக்கப்பட்ட கூட்டணி" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.