நலம் தரும் நவராத்திரி: 2ம் நாள் வழிபாடு : நிறம், நைவேத்தியம், மலர் பற்றிய முழு விபரம்..!
Top Tamil News September 24, 2025 12:48 AM

கிரக தோஷங்கள், திருமணம், குழந்தை, குடும்ப ஒற்றுமை, வருமானம், பிரச்சனை என என்ன கஷ்டமாக இருந்தாலும் துர்கையிடம் சென்று முறையிட்டால் அதற்கு விரைவில் தீர்வு கிடைக்கும். மனதில் பயம், தடுமாற்றம், குழப்பம் உள்ளவர்கள் துர்கை அம்மன் சன்னதிக்கு சென்று, அமைதியாக அமர்ந்து அவளின் திருமுகத்தை பார்த்துக் கொண்டே இருந்தாலே மனம் தெளிவடையும். தைரியம் பிறக்கும். மந்திரம் சொல்வது, விளக்கேற்றுவது என எந்த வழிபாடும் செய்யாமல், துர்கையை தரிசனம் செய்தாலே நமக்குள் மாற்றம் ஏற்படுவதை உணர முடியும். இத்தகைய ஆற்றலை துர்கையின் சன்னதியில் மட்டுமே பெற முடியும்.

 

இப்படிப்பட்ட துர்கையின் அருளை பெறுவதற்கு நவராத்திரியின் இரண்டாம் நாளில் வழிபடுவது சிறப்பு. துர்கையை வழிபடுவதற்கு ஏற்ற கிழமையாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு துர்கை வழிபாட்டிற்குரிய நவராத்திரியின் இரண்டாம் நாள், துர்கைக்கு மிகவும் உகந்த செவ்வாய்கிழமையில் வருவது மிகவும் சிறப்புக்குரியதாகும். அது மட்டுமல்ல, நவராத்திரியின் இரண்டாம் நாளான செப்டம்பர் 23ம் தேதி பகல் 2.40 மணிக்கு பிறகு சித்திரை நட்சத்திரம் துவங்கி விடுகிறது. சித்திரை நட்சத்திரத்திற்குரிய தெய்வம் செவ்வாய் பகவான். அவருக்குரிய கிழமை மற்றும் நட்சத்திரம் இணைந்து வரும் நாளில், நவகிரகங்களையும் தனக்குள் அடக்கியவளாக காட்சி தரும் துர்கையை வழிபடுவது மிக மிக அற்புதமான பலன்களை தரக் கூடியதாகும்.

நவராத்திரி இரண்டாம் நாள் மகிஷாசூரனை வதம் செய்வதற்கு முன்பு, அவனது சேனைகளை துவம்சம் செய்ய புறப்பட்ட அன்னையை, கவுமாரியாக மற்றும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாக மனதார நினைத்து பூஜிக்க வேண்டும்.

கரும்பு வில், பாசாங்குசம், மலரம்பு இவற்றை ஏந்தி அழகாக, கொலு விருப்பவளே "ஸ்ரீ ராஜராஜேஸ்வரி"

இவளுக்குப் பிடித்த பூ மல்லிகையும், துளசியும்.இவற்றைக் கொண்டு அர்ச்சித்தால் மனம் நிறைந்து அருள்பாலிப்பாள்.

கல்யாணி ராகத்தில் பாடலாம். புளியோதரையை நைவேத்தியமாய் படையுங்கள்.

கவுமாரியை த்ரிசக்தி என்றும் சொல்வார்கள்.

மூன்று நிலைகளை மூன்று அக்னிகளில் சேர்த்து ஏகா அக்னியாய் நிற்பவளே அன்னை த்ரிமூர்த்தி.

இவள் மூன்று அக்னிகளாய் இருப்பதனால் தான் ஸ்வாஹாதேவியும், ஸ்வதா தேவியும் திருப்தி அடைகின்றனர்.

இவள் மூன்று வயதுக் குழந்தை வடிவாக இருப்பவள்.

துவிதியை திதி நாளில் மூன்று வயதுக் குழந்தையை அழைத்து வந்து, த்ரிமூர்த்தி தேவியாய் பாவித்து ஆடை, அலங்காரங்கள் செய்து, பாத பூஜை செய்து வணங்க வேண்டும்.

தேவி பாகவதத்தில் இரண்டு, மூன்று அத்தியாயங்களையும், ஸ்ரீலலிதா சகஸ்ர நாமத்தையும், நவாஷரி மந்திரத்தையும் ஓதுதல் வேண்டும்.

முன்று அக்னிகளாய்த் திகழும் த்ரிமூர்த்தி தேவியை வணங்குபவர்களுக்கு மீண்டும் பிறவாமையை வரமாய் அளிக்கின்றாள்.

குரு அருள் பெற்றிடவே மூன்று நிலைகளை நாம் அடைய வேண்டும். மூன்று நிலைகள் அடைய அன்னையின் அருள் வேண்டும்.

கவுமாரி என்ற அவதாரம் முருகப் பெருமானின் சக்தியாகக் கருதப்படுகிறது.

இவளுக்கும் 6 முகங்கள், 12 கைகள் உண்டு என்று ஸ்ரீதத்துவநியதி கூறுகின்றது.

இவளது கரகங்கள் வரத, அபய முத்திரைகள் தவிர வேல், கொடி, தண்டம், பாத்திரம், அம்பு, வில், மணி, தாமரை, சேவல், பரசு ஆகியவற்றை ஏந்தி இருக்கும்.

கவுமாரி 13 கண்களை உடையவள் என்று காரணாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இவள் மயிலை வாகனமாகவும், கொடியாகவும் கொண்டவள்.

நவராத்திரி 2ம் நாள் வழிபாடு : அம்பாளின் பெயர் - ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி

கோலம் - கட்டம் வகை கோலம்

மலர் - முல்லை

இலை - மருவு

நைவேத்தியம் - புளியோதரை

தானியம் - வேர்க்கடலை சுண்டல்

பழம் - மாம்பழம்

ராகம் - கல்யாணி

நிறம் - மஞ்சள்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.