திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அரசு பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது ஒன்றாவது முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 34 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இரண்டு வகுப்பறை பள்ளியாக இயங்குகிறது. இப்பள்ளிக்கு இரண்டு வகுப்பறைகள் உள்ள புதிய கட்டிடம் கட்டப்பட்டு ஒன்பது மாதங்களே ஆகிறது. இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் இன்று காலையில் வகுப்பறை கட்டிடத்தை திறப்பதற்காக வந்து பார்த்த பொழுது மேற்கூரை இடிந்து விழுந்து மாணவிகள் உட்காரும் நாற்காலியில் கொட்டிக் கிடந்தன. வகுப்பறையில் இருந்த எல்இடி டிவி மீதும் மேற்கூரை இடிந்து விழுந்த சிமெண்ட் பூச்சிகள் விழுந்து கிடந்தன.
வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து தலைமையாசிரியர் பூட்டிச் சென்ற நிலையில் சனி ஞாயிறு விடுமுறை முடிந்து இன்று காலை பள்ளியை திறக்கும் போது அசம்பாவித சம்பவம் நடந்தது தெரியவந்தது. பள்ளி வகுப்பறையில் குழந்தைகள் இருக்கும் பொழுது இச்சம்பவம் நடந்திருந்தால் குழந்தைகள் அனைவரும் காயமடைந்து இருப்பார்கள். நல்வாய்ப்பாக விடுமுறை தினத்தில் இந்த அசம்பாவிதம் நடந்ததால் குழந்தைகள் காயம் இன்றி உயிர் தப்பினர். இப் பள்ளி கட்டிடம் திறக்கப்பட்டு 9 மாதமே ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேற்கூறை இடிந்து விழுந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.