5 ஆண்டுகளாக டிகிரி சர்டிபிகேட் கொடுக்கல, எங்களுக்கு வேலை போச்சு – தனியார் கல்லூரியை முற்றுகையிட்ட மாணவிகள்
TV9 Tamil News September 23, 2025 08:48 PM

கடந்த 2020 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் பிஏ ஆங்கிலம் படித்த மாணவிகளுக்கு 5 ஆண்டுகளாக டிகிரி சான்றிதழ் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து செப்டம்பர் 22, 2025 அன்று மாணவிகள் பெற்றோர்களுடன் சென்று கல்லூரி நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இதுவரை 75 பேருக்கு சான்றிதழ் வழங்கவில்லை என்றும் இதனால் தங்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகவும் மாணவிகள் வேதனை தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சான்றிதழ் வழங்க உடனடியாக ஏற்பாடு செய்வதாக கல்லூரி நிர்வாகத்தினர் மாணவிகளை சமாதானப்படுத்தினர்.

5 ஆண்டுகளாக மாணவிகளுக்கு டிகிரி சான்றிதழ் வழங்காத கல்லூரி

அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 2020 ஆம் ஆண்டு படித்த மாணவிகள் 75 பேருக்கு, 5 ஆண்டுகள் ஆகியும் டிகிரி வழங்கப்படவில்லை என பெற்றோர்களுடன் சென்று மாணவிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து கேள்வி எழுப்பிய  பெற்றோரில் ஒருவர், இதனால் எங்கள் மகளுக்கு வேலை கிடைக்கவில்லை எனவும், வேலைவாய்ப்பு அலுவலகத்திலும்  பதிவு செய்ய முடியாத நிலை இருப்பதாகவும் வேதனை தெரிவித்தார்.

இதையும் படிக்க : காதலனுடன் பிரச்னை.. வீடியோ கால் பேசும்போது பெண் தற்கொலை

இந்த நிலையில் அவர்களை சமானதப்படுத்திய கல்லூரி நிர்வாகத்தினர், 75 பேரின் சர்டிபிகேட்டுகள் மட்டும் மிஸ் ஆகி உள்ளதாகவும்,  தற்போது புதிய சான்றிதழ்கள் பல்கலைக்கழகத்தில் தயாராக உள்ளதாகவும் இன்று மாலை அல்லது நாளைக்குள் வழங்கப்படும் உறுதி அளித்தனர். இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

மாணவி வேதனை

இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த மாணவி ஒருவர், தாங்கள் கடந்த 5 ஆண்டுகளாக டிகிரி சான்றிதழ் கேட்டு வருவதாகவும் ஆனால் கல்லூரி நிர்வாகம் ஒவ்வொரு முறையும் சரியான பதிலை அளிப்பதில்லை எனவும் வேதனை தெரிவித்தார். இதனால் தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அரசு தலையிட்டு உடனடியாக தங்களுக்கு சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மாணவிகள் 75 பேருக்கும் 5 ஆண்டுகளுக்கான இழப்பீடு வழங்க கல்லூரி நிர்வாகத்தை அறிவுறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

இதையும் படிக்க : திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்.. பாலியல் தொல்லையால் ரயில் முன் பாய்ந்த இளைஞர்!

இதே போல கடந்த சில மாதங்களுக்கு முன் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தனியார் கல்லூரியில் சேருவதற்காக ரூ.15, 000 கட்டணம் செலுத்தியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு அரசு கல்லூரியில் இடம் கிடைத்த நிலையில் பணத்தையும் மாற்று சான்றிதழையும் மாணவி திருப்பி கேட்டுள்ளார். ஆனால் சான்றிதழை தர மறுத்து கல்லூரி நிர்வாகம் மேற்கொண்டு ரூ.75,000 பணம் செலுத்துமாறு கல்லூரி நிர்வாகத்தை கேட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவி கல்லூரி முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.