ஜிஎஸ்டி.. மத்திய அரசுக்கு CM சரமாரி கேள்வி..! 8 வருடங்களுக்கு முன்பே...
Top Tamil News September 24, 2025 08:48 AM

8 வருடங்களுக்கு முன்பே ஜிஎஸ்டி வரியை குறைக்காதது ஏன்? என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். 

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், 

"ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பாலும் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை உயர்த்தியதாலும் இந்தியர்கள் 2.5 லட்சம் கோடி ரூபாயைச் சேமிக்கலாம்" என பிரதமர் அவர்கள் கூறியுள்ளார். இதைத்தானே தொடக்கத்தில் இருந்தே எதிர்க்கட்சிகளான நாங்கள் வலியுறுத்தி வந்தோம்? 8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், இந்தியக் குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை எப்போதோ சேமித்திருக்குமே?

மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரிக்குறைப்பில் சரிபாதி அளவு மாநில அரசுகளின் பங்கிலிருந்துதான் செய்யப்படுகிறது. இந்த உண்மையை மத்திய அரசு மறைப்பதாலும் பாராட்ட மறுப்பதாலும் இதனைச் சுட்டிக்காட்ட வேண்டியது எனது கடமையாகிறது.

மற்றொரு புறம், ஒன்றிய பா.ஜ.க. அரசு மாநிலங்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய நிதியைத் தர மறுத்து வருகிறது. இந்தித் திணிப்பை ஏற்க மறுக்கும் ஒரே காரணத்துக்காக, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதி மறுக்கப்படுகிறது. இந்த அநீதி எப்போது முடிவுக்கு வரும்?

தங்கள் உரிமைகளைப் பாதுகாத்து, தம் மக்களுக்காக முன்நிற்கும் மாநில அரசுகளைத் தண்டிப்பதன் வழியாக இந்தியா வளர்ச்சி பெற முடியாது. கூட்டாட்சிக் கருத்தியலுக்கு மதிப்பளியுங்கள், உரிய நிதியை விடுவியுங்கள், மக்களுக்கு நியாயமாகச் சேர வேண்டியதைத் தந்து அவர்களைப் பயனடைய விடுங்கள்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.