திருச்செந்தூர் அருகே காதல் விவகாரத்தில் வாலிபரை ஓட ஓட விரட்டிச்சென்று வெட்டி படு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆலந்தலை சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் .இவரும், அங்குள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து இருவரும் திருமணம் செய்வற்காக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாக விசாரணை நடத்திய போலீசார், மணிகண்டனுடன் சென்ற சிறுமியை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தநிலையில் மணிகண்டன் நேற்று திருச்செந்தூருக்கு வந்து கொண்டிருந்தபோது காதலித்த சிறுமியின் 16 வயது தம்பி மற்றும் அவனது நண்பர்களான 16 வயதுடைய 2 பேர் வழிமறித்து தாங்கள் வைத்திருந்த அரிவாளால் வெட்ட முயன்றனர்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டன் உயிருக்கு பயந்து ஓடிய நிலையில் அந்த கும்பல் ஓட ஓட விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதனால் வெட்டுக்காயமடைந்த மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து 3 சிறுவர்களும் அங்கிருந்து தப்பிவிட்டனர். மணிகண்டன் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் இதுதொடர்பாக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
காதல் விவகாரத்தில் வாலிபரை சிறுவர்கள் வெட்டிக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.