ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் காரணமாக ரெயில் வாட்டர் 1 ரூபாய் குறைந்துள்ளது.
ரெயில் பயணங்களின் போது ரெயில் பயணிகளின் வசதிக்காக ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களில் உணவுப் பொருள்கள், குளிர்பானங்கள், டீ, காபி உள்ளிட்டவை தனியார் மூலம் விற்கப்படுகின்றன. அவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டு, பயணிகளுக்கு தரமான வகையில் விற்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோல 'ரெயில் நீர்' எனும் பெயரில் தண்ணீர் பாட்டில்களும் ஒரு லிட்டர், அரை லிட்டர் பாட்டில்களில் விற்கப்படுகின்றன.
ஒரு லிட்டர் நீர் ரூ.15 எனவும், அரை லிட்டர் ரூ.10 எனவும் நிர்ணயிக்கப்பட்டு விற்கப்பட்டுவருகின்றன. ரெயில் நீர் பாட்டில் இந்திய ரெயில்வேயால் வழங்கப்படுகிறது. இந்தநிலையில், ரெயில் நீர் பாட்டில்கள் விலை ரூ.1 குறைக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளதுள்ளது. அனைத்து ரெயில் நிலைய நிர்வாகத்துக்கும் ரெயில்வே வாரியத்தின் சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், ரெயிலில் குடிநீர் பாட்டில்கள் விற்கும் உரிமம் பெற்றவர்களுக்கும் அந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, ரெயில் நீர் பாட்டில் விலை ரூ.1 குறைவு இன்று(திங்கட்கிழமை) முதல் நடைமுறைக்கு வர உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.