ஒரே பயணச்சீட்டில் சென்னை மாநகரப்பேருந்து, மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் வசதியை வழங்கும் 'சென்னை ஒன்' செயலி, தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்தியாவிலேயே இது போன்றதொரு முயற்சி முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தால் உருவாக்கப்பட்ட இந்த செயலியை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் கிடைக்கும் இந்த செயலி, பயணிகளுக்கு பல வசதிகளை வழங்குகிறது:
ஒரு பயணத்தை முடிப்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட போக்குவரத்து சேவைகளை உதாரணமாக, புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் பயன்படுத்த வேண்டியிருந்தால், இந்த செயலி மூலம் ஒரே டிக்கெட்டை பெறலாம். தனித்தனியாக டிக்கெட் எடுப்பதை விட, இதன் மூலம் கட்டணம் குறைவாக இருக்கும்.
நீங்கள் புறப்படும் இடம் மற்றும் சேர வேண்டிய இடத்தை பதிவு செய்தால், அனைத்துவிதமான போக்குவரத்து வழித்தடங்களும் அதாவது பேருந்து, மெட்ரோ, ரயில் ஆகியவை உங்களுக்கு காண்பிக்கப்படும். அதில் நீங்கள் உங்கள் விருப்பத்தை தேர்வு செய்யலாம்.
யுபிஐ அல்லது கட்டண அட்டைகளை பயன்படுத்தி பயணச்சீட்டுகளுக்கான தொகையை செலுத்தலாம். மேலும் பொது போக்குவரத்து இல்லாத பகுதிகளுக்கு செல்ல, இந்த செயலி மூலம் வாடகை கார் அல்லது ஆட்டோக்களையும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் ‘Chennai One’ செயலியைப்பதிவிறக்கம் செய்யவும். உங்கள் தொலைபேசி எண்ணை பயன்படுத்தி, வரும் ஓ.டி.பி.-யை பதிவிட்டு உள்நுழையவும். செயலியின் முகப்பு பக்கத்திலேயே, பேருந்து, மெட்ரோ அல்லது புறநகர் ரயில் சேவைக்குத் தேவையான பயணச்சீட்டுகளைத் தனித்தனியாகப் பெறும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் போன்ற நீண்ட பயணங்களுக்கு, தேவையான வழித்தடத்தைத் தேர்ந்தெடுத்தால், வழியில் பயன்படுத்த வேண்டிய பல்வேறு போக்குவரத்து சேவைகளின் விவரங்கள் காண்பிக்கப்படும்.
பேருந்தில் பயணம் செய்யும்போது, ஓட்டுநரிடம் உங்கள் ஆன்லைன் பயணச்சீட்டை காண்பித்து, அவர் கேட்கும் ஓ.டி.பி-யை உள்ளிட வேண்டும். இந்த செயலி, சென்னை மக்களின் பயணத்தை எளிதாக்குவதுடன், ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பயண அனுபவத்தை வழங்குகிறது.
Edited by Mahendran