'கந்தக் கடவுள் நம் சொந்தக் கடவுள்' என்று போற்றுவார் திருமுருக வள்ளல் வாரியார் சுவாமிகள். எப்போதும் முருக நாமத்தை ஜபித்துக்கொண்டிருந்த அந்த அடியாரின் வாழ்வில் முருகப்பெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்கள் அநேகம். அப்படி முருகக்கடவுள் அவருக்கு அருள்பாலித்த தலங்களில் ஒன்று வயலூர். அந்தத் தல மகிமைகளையும் வாரியார் சுவாமிகளுக்கு முருகப்பெருமான் அருள்பாலித்த விதத்தையும் காண்போம்.
திருச்சிக்கு அருகே உள்ள இந்த அற்புதமான தலத்தில் வள்ளிதேவசேனா சமேதராக ஸ்ரீ சுப்ரமணியசுவாமி எழுந்தருளியிருக்கிறார்.
மேலும் இத்தல முதல்வரான ஆதிநாயகி சமேத ஆதிநாதர் இங்கே அருட்காட்சி தருகிறார். இத்தலத்தின் விருட்சம் வன்னிமரம். இங்குள்ள தீர்த்தத்தை முருகப்பெருமான் தன் வேல் கொண்டு உருவாக்கினார் என்பது ஐதிகம். எனவே அதற்கு, 'சக்தி தீர்த்தம்' என்றே பெயர்.
மூன்று நிலை ராஜகோபுரத்துடன் திகழ்கிறது திருக்கோயில் நுழைவாயில். உள்ளே நுழைந்ததும், பெரிய முன்மண்டபம். இடப் புறத்தில் ஆலய நிர்வாக அலுவலகமும், ஸ்தல விருட்சமான வன்னி மரமும் உள்ளன. கடந்து உள்ளே சென்றால் நந்தி - கொடிமரம் அமைந்துள்ளது.
இத்தல ஈசனான ஆதிநாதரை மனதில் நினைத்துக் கொடிமரம் முன்பாக வீழ்ந்து வணங்கி பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்தபடியே உள்ளே சென்றால் ஆதிநாதர் சந்நிதியை தரிசிக்க முடியும்.
சந்நிதிக்குச் செல்லும் முன்பாக உள்ள மண்டபத்தின் வடபுறம் தன் தேவியுடன் திகழும் ஸ்ரீநடராஜர் சதுர தாண்டவ கோலத்தில் அருள்பாலிப்பதை தரிசிக்கலாம்.
இந்தக் கூத்தரசனுக்கு திருவாசியோ, இவரின் பாதத்தின் கீழே முயலகனோ இல்லை என்பது விசேஷம். அந்த ஆனந்த நடனத்தை ரசித்தபடி எதிரே மாணிக்கவாசகர் எழுந்தருளியிருக்கிறார். இதே மண்டபத்தின் தெற்கு மூலையில் ஸ்ரீகால பைரவர்.
கருவறையில் நாகம் குடைபிடிக்க, வெள்ளிக் கவசத்துடன் லிங்கசொரூபமாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார் ஸ்ரீஆதிநாதர்.
ஸ்ரீவிடங்கப்பெருமான், மகாதேவன், திருக்கற்றளிப் பெருமான் அடிகள் ஆகிய பெயர்களும், அக்னி வழிபட்டதால், 'ஸ்ரீஅக்னீஸ்வரர்' என்ற திருநாமமும் இவருக்கு உண்டு.
அம்பாள் ஸ்ரீஆதிநாயகி, தெற்கு நோக்கிய தனிச் சந்நிதியில் அருள் புரிகிறாள். அக்னீஸ்வரரையும் ஆதிநாயகியையும் பக்தியோடு வணங்கி வழிபட்டால் தோஷங்கள் தீர்வதோடு வாழ்வில் சுபிட்சம் பிறக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் : மகப்பேறு அருளும் நெய்பிரசாதம்; மருந்துப்பொடி; வாழைத்தார் விநாயகருக்கு திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர்இத்தலத்தின் மற்றொரு விசேஷம் ஸ்ரீபொய்யா கணபதி. அருணகிரி நாதர் கைத்தல நிறைகனி பாடிப் போற்றிய விநாயகப்பெருமான் இவர்தான்.
இவரை வணங்கினால் மாணவர்களுக்குக் கல்வி கேள்வியில் அபரிமிதமான முன்னேற்றம் உண்டாகும் என்கிறார்கள். பொய்யாகணபதி சந்நிதிக்கு அருகிலேயே அருணகிரிநாதர் சந்நிதி அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் மயில் மீது அமர்ந்திருக்கும் முத்துகுமாரசுவாமியையும் தரிசிக்கலாம்.
தெற்கு மண்டபத்தை ஒட்டி, அம்பாள் மற்றும் ஸ்வாமி சந்நிதிகளுக்கு பின்புறம் வயலூர் முருகனின் சந்நிதி அமைந்துள்ளது.
வள்ளி- தெய்வானை சமேதராகக் காட்சி தரும் ஸ்ரீசுப்ரமணியரின் திருக்கோலம் பேரழகு. மற்றுமொரு விசேஷம், மயில் வாகனம் இத்தலத்தில் தெய்வானையின் பக்கம் திரும்பி நிற்பது.
திருமண தோஷம் உள்ளவர்கள், முதல்நாள் இரவே இங்கு வந்து தங்கி, மறுநாள் சக்தி தீர்த்தத்தில் நீராடி, சுப்ரமணிய ஸ்வாமிக்கு 'கல்யாண உற்சவம்' நடத்தி வழிபட்டால் திருமணம் நடந்தேறும் என்பது பக்தர்களது நம்பிக்கை.
முகூர்த்த நாள்களில் திருமண வைபவங்களும் இங்கே அதிக அளவில் நடைபெறுகின்றன. சர்ப்ப தோஷம் மற்றும் குழந்தை பாக்கியம் இல்லாதோர் இங்கு வந்து புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, வயலூர் முருகப் பெருமானை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி, நற்பலன்கள் கிடைக்கும் என்கின்றனர்.
வயலூரானின் சந்நிதியை அடுத்து ஸ்ரீமகாலட்சுமி மற்றும் ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகியோரைத் தரிசிக்கலாம். தன் தேவியருடன் சூரிய பகவான் நடு நாயகராக நவகிரகங்களில் வீற்றிருப்பது ஒரு தனித்துவமான அமைப்பு என்றே சொல்ல வேண்டும். அவரைச் சுற்றிலும் மற்ற கிரக மூர்த்தியர் அருள் பாலிக்கிறார்கள்.
ஒரு முறை, பயிர்களை நாசப்படுத்தியும் குடிமக்களை துன்புறுத்தியும் வந்த விலங்குகளை அழிக்க வேட்டைக்குப் புறப்பட்டான் சோழ மன்னன் ஒருவன்.
வழியில், மன்னனுக்குக் கடும் தாகம் ஏற்பட்டது. படை வீரர்கள் தண்ணீர் தேடி அலைந்தனர். அப்போது கரும்புத் தோட்டம் ஒன்றில், மூன்று தோகைகளுடன் வித்தியாசமாக வளர்ந்திருந்த ஒரு கரும்பைக் கண்டனர்.
'இது மன்னரின் தாகத்தைத் தணிக்க உதவும்' என்ற எண்ணத்துடன், அந்தக் கரும்பை ஒடித்தனர். மறு கணம், அந்தக் கரும்பில் இருந்து ரத்தம் வழிந்தது. இதையறிந்த மன்னன் வியந்தான். அந்தக் கரும்பு வளர்ந்திருந்த இடத்தைத் தோண்டும்படி கட்டளையிட்டான்.
அதன்படியே, படை வீரர்கள் குழி தோண்ட, அழகான சிவலிங்கம் ஒன்று வெளிப்பட்டது. மன்னன் மெய்சிலிர்த்தான். அந்த இடத்திலேயே ஓர் ஆலயம் எழுப்ப ஆணையிட்டான்.
விரைவிலேயே ஆலயம் எழும்பியது. உள்ளே, 'ஸ்ரீஆதிநாதர்' என்ற திருநாமத்துடன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதன்பிறகு அம்பாள் ஸ்ரீஆதிநாயகியின் சிலா விக்கிரகமும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ராஜகேசரி வர்மன், குலோத்துங்கச் சோழன், கோப பரகேசி வர்மன், ராஜேந்திர சோழன் ஆகியோரால் திருப்பணிகள் கண்ட கோயில் இது. ராஜராஜ சோழன், ஐநூற்றுக் கால் மண்டபம் ஒன்றை எழுப்பி, அதன் உள்ளே தாண்டவ மூர்த்தியை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
திருவாரூர் திருக்கொள்ளிக்காடு : ஏழரைச் சனியால் அவதியா? - நீங்கள் போக வேண்டிய தலம் திருமுருக வள்ளல் சுவாமிகளும் வயலூரும்ஒருமுறை வாரியார் சுவாமிகள் பல முருகத் திருத்தலங்களுக்கும் சென்று தரிசனம் செய்துவந்தார். அப்போது வயலூருக்கும் சென்றார்.
அங்கே முருகப்பெருமானை வெள்ளிக் கவசத்துடன் தரிசனம் செய்ய, 'எட்டணா' என்று எழுதியிருந்தது. வாரியார் சுவாமிகள் அந்தக் கட்டணத்தை செலுத்தி முருகப்பெருமானை கண்குளிர தரிசனம் செய்து திரும்பினார்.
சில நாள்களில் அவர் வீட்டுக்கு வயலூர் முருகன் கோயிலில் இருந்து எட்டணா மணியார்டர் வந்திருந்தது. என்ன ஏது என்று தெரியவில்லை.
மறுமுறை வயலூர் சென்றபோது வாரியார் சுவாமிகள் அங்கிருந்த குருக்களிடம், 'யார் எட்டணா அனுப்பியது' என்று விசாரித்தார்.
குருக்கள் தர்மகர்த்தாவை அழைத்துவந்தார். அவர் சுவாமிகளைப் பார்த்ததும் பணிவோடு வணங்கினார். பிறகு என்ன நடந்தது என்பதை விவரித்தார்.
"தாங்கள்வந்து தரிசனம் செய்துபோனது எனக்குத் தெரியாது. அன்றைய இரவு என் கனவில் முருகப்பெருமான் ஆண்டிக்கோலத்தில் எழுந்தருளினார்.
'என் பக்தனிடம் எப்படி நீ எட்டணா வசூலிக்கலாம்? அந்த எட்டணாவைக் கொண்டு கோட்டையா கட்டப்போகிறாய்?' என்று கூறி மறைந்தார்.
என் கண்கள் கண்ணீர் பெருக மேனி சிலிர்த்துவிட்டது. மறுநாள் ஆலயம் வந்து 'யார் வந்துபோனது' என்று விசாரித்தேன். 'நீங்கள்' என்று சொன்னார்கள். அதனால் உடனடியாக அந்த எட்டணாவை உங்களுக்கு அனுப்பினேன்'' என்று கூறினார்.
இதைக்கேட்ட வாரியார் சுவாமிகளுக்குக் கண்ணீர் பெருகியது.
"என்னைத் தன் அடியவன் என்று அவனே தன் வாய் மலர்ந்து அருளினானா... இனி எப்பிறப்பிலும் இந்த வயலூரானை நான் மறக்கமாட்டேன்" என்று நெகிழ்வோடு பேசினார்.
அன்றுமுதல் அவருக்கு வயலூர் தன் சொந்த ஊர்போல் ஆனது. வயலூர் முருகன் கோயில் திருப்பணி காணாமல் இருப்பது கண்டு மனம் வருந்தித் தான் சொற்பொழிவு ஆற்றிக் கிடைத்த பணத்தை ஆலயத் திருப்பணிக்குக் கொடுத்தார்.
திருப்பணி அற்புதமாக நடந்தது. இதற்கு சாட்சியாக அவரது உருவச்சிலையும் ஒரு கல்வெட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டில், 'வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு ஆற்றியதால் கிடைத்த ரூ.26,384.93 மற்றும் தனது சொந்தப் பணத்தில் இருந்து ரூ.1,505 ஆகியவற்றைத் திருப்பணிக்காக வழங்கியுள்ளார்' என்ற அறிய தகவல் செதுக்கப்பட்டுள்ளது.
இப்படிப் பேசும் தெய்வமாகத் திகழும் வயலூர் முருகப்பெருமானின் ஆலயத்தை வாழ்வில் ஒருமுறையேனும் முருக பக்தர்கள் தரிசிக்க வேண்டும்.
கோயில் விசேஷங்கள்இங்கே கோயிலில், தினமும் ஆறுகால பூஜை நடை பெறுகிறது. சஷ்டி, கார்த்திகை, ஆடிக் கிருத்திகை முதலான நாள்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் விசேஷ பூஜைகள், வீதி உலா நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
வைகாசி விசாகத்தின்போது நடைபெறும் பிரம்மோற்சவத்தை ஒட்டி, பால்குடம் எடுத்தல், தேரோட்டம், தெப்ப உற்சவம் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ஆனி மாத மூல நட்சத்திரத்தன்று அருணகிரி நாதருக்கு விசேஷ ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன. கந்த சஷ்டித் திருவிழா விமர்சையாக நடைபெறும்.
கிடாத்தலைமேடு: பிரச்னைகளை விரட்டி அடிக்கும் சண்டிகாதேவி; இல்லறம் சிறக்க அருளும் காமுகாம்பாள்!