சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
"சி.பி.ஐ. விசாரணையை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. இது மாநில உரிமைகள், மாநில தன்னாட்சிக்கு நிகழ்ந்த அவமதிப்பு. எங்கள் காவல்துறை விசாரணையில் என்ன குறை கண்டீர்கள்? சி.பி.ஐ. விசாரணை கோருவதன் மூலம் தமிழக காவல்துறை தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்கிறதா?" என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர், "எல்லாமே மாநில உரிமை என்று பேசும் தி.மு.க. அரசு, எல்லாப் பிரச்சினைகளுக்கும் மத்திய அரசைக் கைகாட்டுகிறது. சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்றவை ஆட்சியாளர்களின் ஐந்து விரல்கள் போலத்தான் செயல்படும். சி.பி.ஐ. விசாரணையில் என்ன வந்துவிடப்போகிறது? இவ்வளவு சிறந்த எங்கள் காவல் படையை அவமதிக்கிறீர்கள். இது ஒரு தேசிய இன அவமதிப்பு," என்று கடுமையாக விமர்சித்தார்.
சி.பி.ஐ. விசாரணை என்பது காலத்தை கடத்தும், திசை திருப்பிவிடும் என்றும், "கேப்டன் விஜயகாந்த் நடித்த 'புலன் விசாரணை' படம்கூட சுவாரசியமாக இருக்கும்; ஆனால் சி.பி.ஐ. புலன் விசாரணை சரியாக இருக்காது," என்றும் கிண்டலாக கூறினார்.
"விஜய் கூட்டத்தில் இறந்தவர்கள் குறித்து தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருந்திருந்தால் யாரும் பேசி இருக்க மாட்டார்கள். தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருப்பதால் பேசுகிறார்கள். எப்படியாவது விஜய்யை பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணிக்குள் கொண்டு வர ஒரு சாராரும், அந்த கூட்டணிக்கு அவர் சென்றுவிட கூடாது என்று மற்றொரு சாராரும் கடந்த 10 நாட்களாக செயல்பட்டு வருகிறார்கள்," என்று சீமான் குற்றம் சாட்டினார்.
Edited by Mahendran