'கரூர் சிபிஐ விசாரணை ஸ்டாலினுக்கு பெரிய அடி' - வானதி சீனிவாசன்
Vikatan October 14, 2025 04:48 AM

கோவை புலியகுளம் பகுதியில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கு எதிரான மாடலாக  இருக்கிறது.

வானதி சீனிவாசன்

மகளிர் உரிமைத் தொகையில் விடுபட்டவர்களுக்கு, விரைவில் உதவித்தொகை வழங்குவோம் என்று துணை முதல்வர் உதயநிதி சொல்லியுள்ளார். இத்தனை ஆண்டுகளாக கொடுக்காமல், தேர்தல் நேரத்தில் இப்படி சொல்லி மக்களை ஏமாற்றும் வேலையை செய்கிறார்கள். இந்த அரசு போதும் என்கிற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்.

கரூர் சம்பவத்தை  சிபிஐ விசாரணைக்கு  உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். கரூரில் நடந்ததை விபத்தாக ஏற்க முடியாது. காவல்துறையை கையில் வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இந்த தீர்ப்பு ஒரு அடியை கொடுத்துள்ளது.

கரூர் | சிபிஐ விசாரணை

சிபிஐ விசாரணையில் உண்மை வெளி கொண்டு வரப்படும். கரூர் சம்பவத்திற்கு காரணமானவர்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், அவர்கள் அதிகார வர்க்கத்துக்கு எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் மக்கள் முன்பாக நிறுத்தப்படுவார்கள்.

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த நபர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நாங்கள்  நினைக்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுப்பதை அரசியலாக பார்த்தால் பார்த்துக் கொள்ளுங்கள். பாஜகவின் பொதுவான நிகழ்ச்சிகளுக்கு வரும் தொழிலதிபர்களை கூட திமுக மிரட்டுகிறது.

கரூர் துயரம்

இதை வெளிப்படையாக சொல்ல முடியாது. திமுக அதிகார மமதையின் உச்சத்தில் இருக்கிறது . நாளை சட்டசபை கூட்டம் நடக்க இருக்கிறது. சட்டமன்றத்தில் கரூர் சம்பவம் நிச்சயம் எதிரொலிக்கும்.”  என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.