2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் ஆயுதக் குழுவினர் இஸ்ரேலில் நடத்திய பயங்கரவாத தாக்குதல் உலகையே உலுக்கியது. கிப்ருட்ஸ் பகுதியில் நடைபெற்ற நோவா இசை விழாவில் கலந்து கொண்டிருந்த ரோயி ஷலீவ் (வயது 30) என்பவர், தனது காதலி மபெல் ஆடம் மற்றும் நண்பர் ஹிலி சாலமோனுடன் ஒன்றாக இருந்தார்.
அதே நேரத்தில் நிகழ்ச்சிக்குள் புகுந்த ஹமாஸ் பயங்கரவாதிகள், கலாச்சார விருந்தினை இரத்த விருந்தாக மாற்றினர். இதில் ரோயியின் காதலி மபெல் ஆடம் அவரது கண்முன்னே கொடூரமாக கொல்லப்பட்டார். தானும் படுகாயமடைந்த நிலையில் உயிர் தப்பினார் ரோயி. அன்று முதல் மன உளைச்சலுடன் வாழ்க்கையை கழித்த ரோயி, காதலியின் நினைவில் முழுமையாக உறைந்திருந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
காதலியின் மரணத்தை ஏற்க முடியாமல் தவித்த நிலையில், கடந்த அக்டோபர் 10ம் தேதி, ஹமாஸ் தாக்குதலுக்கான இரண்டாம் ஆண்டு நினைவு நாளில், டெல் அவிவ் நகரில் தனது வீட்டின் அருகே உள்ள காருக்குள் உடலில் பெட்ரோலை ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அவரது சுற்றியுள்ளவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரோயியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. மேலும், அவர் கடந்த சில வாரங்களாக கடுமையான மன அழுத்தத்துடன் வாழ்ந்தது விசாரணை மூலம் வெளிவந்துள்ளது.
அதேபோல், 2023 ஆம் ஆண்டு ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, ரோயியின் தாயாரும் மபெல் ஆடத்தின் மரணத்தால் மனவேதனையில், சில நாட்களிலேயே அதேபோல் காருக்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொண்டார் என்பது மேலும் இந்தக் குடும்பத்தின் மீதான சோகச்சாயலை அதிகரிக்கிறது.