இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்: சென்னையில் அமலாக்கத்துறை சோதனை..!
WEBDUNIA TAMIL October 14, 2025 09:48 AM

குழந்தைகள் உயிரிழந்த சர்ச்சைக்குரிய இருமல் மருந்து தயாரிப்பு தொடர்பான பணமோசடி வழக்கில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்னையில் இன்று அதிரடி சோதனைகளை தொடங்கியுள்ளனர்.

மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், காஞ்சிபுரம் ஸ்ரீசன் ஃபார்மா நிறுவனம் தயாரித்த 'கோல்ட்ரிஃப்' இருமல் மருந்தை உட்கொண்ட 22 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்தனர். இந்த மருந்து கலப்படம் செய்யப்பட்டது என்பது தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையால் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக, மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் கோவிந்தன் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை களமிறங்கியுள்ளது.

ரங்கநாதனின் வீடு உட்பட சென்னையில் 7 இடங்களில் இந்த சோதனைகள் நடைபெறுகின்றன. இதில், நிறுவனத்தை கண்காணிக்க தவறியதாகக் கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் தீபா ஜோசப் மற்றும் கார்த்திகேயன் ஆகியோரின் வீடுகளும் அடங்கும்.

இந்த ஊழலில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் முறைகேடுகள் குறித்த ஆதாரங்களை திரட்டும் நோக்கில் அமலாக்கத் துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.