கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பேரழிவுக்கு காரணமான தவறுகள் குறித்து முழுமையான, நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகின.
மனுதாரர்களின் கோரிக்கையை விசாரித்த உச்சநீதிமன்றம், இன்று அந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி, மத்திய புலனாய்வு அமைப்பே இனி முழுமையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் வழங்கிய உத்தரவின் முழு விவரமும் தற்போது வெளியாகியுள்ளது. அதில், “இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதால், தமிழக அரசு முன்னதாக நியமித்த ஒருநபர் ஆணையம் மற்றும் சிறப்பு புலனாய்வு குழுவின் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்படுகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், “நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை என்பது மக்களின் அடிப்படை உரிமை” எனும் முக்கியமான வாக்கியத்தையும் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் பதிவு செய்துள்ளது.
முன்னதாக தமிழக அரசு, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்திருந்தது. அதேபோல், ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவும் செயல்பட்டு வந்தது. ஆனால் இப்போது, உச்சநீதிமன்ற உத்தரவின்படி இவை அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த தீர்ப்பு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்கும் எனும் நம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது.