சேலத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “த.வெ.க.வினர் விருப்பப்பட்டே அவர்களின் கொடியுடன் வந்து எனக்கு வரவேற்பு கொடுக்கின்றனர். தலைமையின் அனுமதியை பெற்றே வரவேண்டும் என த.வெ.க.வினரிடம் எங்கள் மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தினார்கள். ஆனாலும், அவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள். இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் சில கட்சிகள் விமர்சனம் செய்கின்றன. கரூர் சம்பவத்தை தொடர்ந்து நான் விஜய்யுடன் செல்போனில் பேசவில்லை. கரூர் சம்பவம் நடந்தவுடனே நான் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன்
எப்போது நாங்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தோமோ, அப்போதிலிருந்தே எங்களை விமர்சனம் செய்கிறார்கள். நாங்கள் யாரோடு கூட்டணி வைத்தால் அவர்களுக்கு என்ன?. தி.மு.க.வோடு கூட்டணியில் உள்ளவர்கள் எங்களைப் பற்றி பேச என்ன தகுதி உள்ளது?. ஆட்சியில் பங்கு, அதிகம் தொகுதிகள் வேண்டும் என தி.மு.க.வில் உள்ள கூட்டணி கட்சிகள் கேட்க ஆரம்பித்துவிட்டன. தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
எங்கள் கட்சியில் 2 கோடி தொண்டர்கள் உள்ளனர். தேர்தல் நெருங்கும்போதுதான் கூட்டணி இறுதியாகும். நயினார் நாகேந்திரன் தொடங்கும் பிரச்சாரத்தில் அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர். விவசாயிகள், பொதுமக்களின் ஆதரவை பெற்று அடுத்த ஆண்டு அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியமைக்கும்" என தெரிவித்தார்.