Dude Collection: தீபாவளி என்றாலே பட்டாசு, இனிப்பு, புது உடை இவற்றை தாண்டி அடுத்த லிஸ்ட்டில் இருப்பது புதிதாக ரிலீஸாகும் திரைப்படங்கள்தான். முன்பெல்லாம் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பெரிய நடிகரின் திரைப்படங்கள் தீபாவளிக்கு வெளியாகும். ஆனால் இந்த வருட தீபாவளியை பொறுத்தவரை பெரிய நடிகர்கள் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. மாறாக பிரதீப் ரங்கநாதனின் டியூட்,ஹரிஷ் கல்யாணின் டீசல், துருவ் விக்ரமின் பைசன் ஆகிய மூன்று படங்களும் நேற்று வெளியாகியிருக்கிறது..
இதில் பைசன் திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருக்கிறார். வழக்கம்போல ஒரு சீரியஸ் சினிமாவாக பைசனை அவர் எடுத்திருந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தது போல திரைக்கதை அமைத்து பாராட்டை பெற்றிருக்கிறார். இந்த படத்திற்கு முதல் காட்சியிலிருந்தே பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. இதுக்கு முந்தைய படங்களில் சாதிய ஒடுக்கு முறைகளை அதிகம் காட்டிய மாரி செல்வராஜ் இந்த படத்தில் அதை குறைத்துக் கொண்டு ‘எல்லோரும் சமம்’ என்பது போல திரைக்கதை அமைத்திருக்கிறார். எந்த சாதியையும் தூக்கிப்பிடித்தோ, எந்த சாதியும் மட்டம் தட்டியோ அவர் பேசவில்லை. அதுவே படத்தின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்தை பொறுத்தவரை அது ஒரு ஜாலியான, கலகலப்பான குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படமாக உருவாகியிருக்கிறது. பொதுவாக தீபாவளி என்றாலே மக்கள் மகிழ்ச்சியான கொண்டாட்ட மனநிலையில் இருப்பார்கள். எனவே பைசன் போன்ற சீரியஸ் சினிமாவை விட டியூட் போன்ற கலகலப்பான படங்களை பார்க்க ஆசைப்படுவார்கள். அந்த வகையில் டியூட் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. பைசன் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தாலும் டியூட் படம் அதிக வசூலை பெற்று வருகிறது. வெளியான முதல் நாளிலேயே இப்படம் 10.09 கோடி வசூல் செய்து அசத்தியிருக்கிறது.
அந்தப் பக்கம் பைசன் முதல் நாளில் தமிழகத்தில் 2.50 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. அதே நேரம் 4 நாட்கள் தொடர் விடுமுறை இருப்பதால் பைசன் டியூடை முந்துமா? இல்லை டியூடே அதிக வசூலை பெருமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.