தீபாவளி கொண்டாட வேண்டாம்…. தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவுறுத்தல்
TV9 Tamil News October 19, 2025 02:48 AM

கரூர் (Karur) வேலுச்சாமிபுரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. தற்போது இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதனையடுத்து கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய்யை (Vijay) சந்தித்தனர்.  அப்போது கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருக்குமாறு விஜய் அவருக்கு அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தவெக பொதுச்செயலாளர் அக்கட்சியினர் யாரும் தீபாவளி கொண்டாட வேண்டாம் என உத்தரவிட்டிருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தீபாவளி கொண்டாட வேண்டாம்

தீபாவளிக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில் மக்கள் அதற்காக தயாராகி வருகின்றனர்.  இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் இந்த ஆண்டு தீபாவளியைக் கொண்டாட வேண்டாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார். கரூரில் தவெக விஜய்யின் பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், அதற்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக தீபாவளி கொண்டாட வேண்டாம் என அறிவுறுத்தியிருக்கிறார்.

இதையும் படிக்க : மதுரை மாநகராட்சி முறைகேடு மர்மம்.. எப்போது விலகும்? நயினார் நாகேந்திரன் கேள்வி..

கடந்த அக்டோபர் 17, 2025 அன்று தவெக தலைவர் விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை தனியார் திருமண மண்டபத்தில் வைத்து சந்திப்பார் என கூறப்பட்ட நிலையில் அந்த நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தீபாவளியை முடிந்த பிறகு காவல்துறையின் அனுமதியை பெற்று சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நவம்பர் 25, 2025 அன்று முதல் மீண்டும் விஜய் பரப்புரையில் ஈடுபடவுள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அக்கட்சியின் பொதுச்செயலாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

குழப்பத்தை ஏற்படுத்தும் விஜய்யின் மௌனம்?

கரூர் வழக்கு முடிந்த  3 நாட்களுக்கு பிறகு இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நீதி வெல்லும் என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால் அது தவிர அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலோ, விளக்கமோ அளிக்கவில்லை. இன்னும் மீடியாவை சந்திக்காமலேயே இருக்கிறார்.

இதையும் படிக்க : தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல… தேர்தல் ஆணையம் அறிவிப்பு – என்ன நடந்தது?

அவ்வப்போது பட்டினப்பாக்கம் அலுவலகம் சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்த விஜய் தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு பனையூர் அலுவலகம் வரத் தொடங்கியிருக்கிறார். இந்த விவகாரத்தில் அவரது நிலைப்பாடு என்ன? அவரது அடுத்தகட்ட திட்டம் என்ன? என்பது அவரது கட்சியினருக்கே குழப்பமாக இருந்து வருகிறது.  சமீபத்தில் சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு விஜய் தாமதமாக வந்ததே காரணம் என தெரிவித்திருந்தார். அதற்கு விஜய்யிடம் இருந்து எதிர்ப்போ, மறுப்போ வெளியாகவில்லை. இது தவெகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக அவருக்காக எதிர்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பேசும் அளவுக்கு கூட விஜய் பேசவில்லை என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.