பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்திருக்கிறது இந்திய அணி. முதலிரு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் அடுத்த இரு போட்டிகளில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்விகளைச் சந்தித்திருக்கிறது.
இரண்டு போட்டிகளிலுமே நல்ல நிலையில் இருந்தும் அதைப் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் தடுமாறியிருக்கிறது ஹர்மன் தலைமையிலான அணி. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா நன்கு போராடியது என்று சிலர் திருப்திபட்டுக்கொண்டாலும், வெற்றி பெறவேண்டிய இரு போட்டிகளை அடுத்தடுத்து கோட்டை விட்டு இருக்கிறார்கள் என்ற விமர்சனமும் வலுக்கவே செய்கிறது.
இந்நிலையில், இந்த இரண்டு தோல்விகளுக்கும் முக்கிய காரணங்கள் என்னென்ன, அடுத்து வெற்றிப் பாதைக்குத் திரும்ப இந்தியா என்ன செய்யவேண்டும் என்பவை பற்றி இந்திய முன்னாள் வீராங்கனையான திருஷ் காமினி நம்மிடம் பகிர்ந்திருக்கிறார்.
"இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான இந்த உலகக் கோப்பைத் தொடரில் இன்னும் ஒரு முழுமையான அணியாக இந்தியா செயல்படவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் ஒருசில வீராங்கனைகள் நன்றாக செயல்படுகிறார்கள். மற்றவர்கள் தடுமாறுகிறார்கள். அது இந்த 4 போட்டிகளிலுமே தொடர்ந்திருக்கிறது. மேலும், பிளேயிங் லெவனில் ஆறாவது பௌலிங் ஆப்ஷன் இல்லாதது, பேட்டிங் ஆர்டரை மாற்றாமல் அப்படியே களமிறக்குவது போன்ற விஷயங்கள் இந்தியாவுக்கு மிகப் பெரிய பிரச்னையாக அமைந்திருக்கின்றன" என இந்தியாவின் தடுமாற்றத்துக்கு இரண்டு முக்கியக் காரணங்களை சுட்டிக்காட்டுகிறார் திருஷ் காமினி. தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான திருஷ் காமினி இந்தியாவுக்காக 44 சர்வதேச போட்டிகளில் விளையாடி 1000 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கிறார். இவர் தற்போது வர்ணனையாளராகவும் இருந்துவருகிறார்.
பேட்டிங் ஆர்டர் சிக்கல்ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய ஓப்பனர்கள் ஸ்மிரிதி மந்தனா, பிரதிகா ராவல் இருவருமே மிகச் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தார்கள். இந்த இணை 24.3 ஓவர்களிலேயே 155 ரன்கள் எடுத்தது. ஸ்மிரிதி மந்தனா அவுட் ஆனதும், அவரைப் போலவே அதிரடியாக ஆடக்கூடிய ஒரு பேட்டரே களமிறங்குவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், வழக்கமான நம்பர் 3 பேட்டர் ஹர்லீன் தியோலையே களமிறக்கியது இந்தியா. ஹர்லீன் ஓரளவு நன்றாகவே பேட்டிங் செய்திருந்தாலும், அது சரியான முடிவு இல்லை என்று தெரிவித்திருக்கிறார் திருஷ் காமினி.
"ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய ஓப்பனர்கள் முதல் விக்கெட்டுக்கு 155 ரன்கள் குவித்துவிட்டனர். அப்படியொரு நல்ல தொடக்கம் கிடைத்துவிட்ட பிறகு இந்திய அணி அதைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டது. மூன்றாவது பேட்டராகக் களமிறங்கிய ஹர்லீன் தியோல் நன்றாகத் தான் ஆடினார். அதில் எந்தக் குறையும் இல்லை. ஆனால், 25வது ஓவரில் 150 ரன்களைக் கடந்திருந்த சூழ்நிலையில், 100 ஸ்டிரைக் ரேட்டில் ஆடக்கூடிய ஒரு பேட்டரை விட 150 ஸ்டிரைக் ரேட்டில் ஆடக்கூடிய ஒருவரைக் களமிறக்கியிருக்கவேண்டும். ரிச்சா கோஷ் அல்லது கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் இருவரில் ஒருவர் மூன்றாவது இடத்தில் களமிறங்கியிருக்கவேண்டும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடி நல்ல ஃபார்மில் இருக்கும் ரிச்சா, அதையே ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் தொடர்ந்திருந்தால், அந்த இடத்திலேயே ஆஸ்திரேலியாவை முழுமையாக பின்தங்கவைத்திருக்க முடியும்.
ஒருவேளை அவர்கள் இருவரும் ஃபினிஷிங்குக்குத் தேவை என்று நினைத்திருந்தால் தீப்தி ஷர்மாவைக் கூட அந்த இடத்தில் அனுப்பியிருக்கலாம். தீப்தியால் அதே அதிரடியைக் காட்ட முடிந்திருக்காவிட்டாலும், உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார்.
முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பைப் பார்த்தீர்களெனில், பிரதிகா ராவல் லெக் சைடில் தான் அதிக பௌண்டரிகள் அடித்தார். காரணம், இடது - வலது கை பேட்டர்கள் ஒன்றாக ஆடியதன் விளைவு. இடது கை பேட்டரான ஸ்மிரிதி மந்தனாவுக்குப் பந்துவீசிவிட்டு பிரதிகாவுக்கு பந்துவீசும்போது, ஆஸ்திரேலிய பௌலர்கள் அவர்களது லைனில் சிறு தவறுகள் செய்தனர். அதை பிரதிகா சரியாகப் பயன்படுத்திக்கொண்டிருந்தார். ஸ்மிரிதி அவுட் ஆனதும் இன்னொரு இடது கை பேட்டரான தீப்தியை அனுப்பியிருந்தால், அது தொடர்ந்திருக்கும்" என்று இன்னொரு வாதத்தையும் முன்வைக்கிறார் திருஷ்.
இந்த உலகக் கோப்பையைப் பார்த்தவர்களுக்கு இது எவ்வளவு சரியான விஷயம் என்று புரியும். முதல் 3 போட்டிகளில், இந்திய ஓப்பனர்கள் பெரிய பார்ட்னர்ஷிப்கள் அமைக்காதபோது பிரதிகாவின் 80% பௌண்டரிகள் ஆஃப் சைடில் தான் அடிக்கப்பட்டிருந்தன. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அது அப்படியே தலைகீழாக இருந்தது. இடது - வலது பேட்டர்கள் பார்ட்னர்ஷிப் நன்கு ஆடியபோது அது பௌலர்களுக்கு சவால் கொடுத்தது. ஒருவேளை தீப்தி வந்திருந்தால், திருஷ் சொல்வதுபோல் அது தொடர்ந்திருக்கும். அதுமட்டுமல்ல, அது ஆஸ்திரேலிய கேப்டன் அலீஸா ஹீலிக்கும் பெரும் தலைவலியைக் கொடுத்திருக்கும். இடது கை பேட்டரான ஸ்மிரிதி மந்தனா களத்தில் இருந்ததால் லெக் ஸ்பின்னர் அலானா கிங்கை பயன்படுத்தாமலேயே இருந்தார் ஹீலி. 25வது ஓவரில் ஸ்மிரிதி அவுட் ஆனதும், 26வது ஓவரில் கிங் கையில் பந்தைக் கொடுத்தார். ஒருவேளை அந்த இடத்தில் தீப்தி வந்திருந்தால் அது ஹீலியின் அந்த முடிவுக்கு பெரும் சிக்கலாக அமைந்திருக்கும்.
"நீண்ட பேட்டிங் ஆர்டர் இருக்கும்போது இதுபோல் அதிக ரன்கள் வரும் சூழ்நிலைகளில் ஹர்லீன் தியோல், ஜெமிமா ராட்ரீக்ஸ் இருவரையும் முன்பு களமிறக்கியிருக்ககூடாது. ஆனால், இந்திய அணி அது எதையுமே செய்யவில்லை. போட்டியின் சூழ்நிலை பற்றியெல்லாம் கொஞ்சமும் யோசிக்காமல் அதே பேட்டிங் ஆர்டரைப் பின்பற்றுவது சரியான அணுகுமுறை என்று நான் நினைக்கவில்லை. இனிவரும் போட்டிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப இந்திய அணி பேட்டிங் ஆர்டரை மாற்றிக்கொள்ளவேண்டும்" என்று தன் கருத்தைப் பதிவிட்டார் இந்திய அணியின் முன்னாள் ஓப்பனரான திருஷ் காமினி.
பேட்டிங் ஆர்டர் ஒருபக்கம் பிரச்னை என்றால், ஒரு பேட்டர் மீதே பெரும் விமர்சனம் வைக்கப்பட்டுவருகிறது. இந்தப் போட்டியில் 75 ரன்கள் அடித்திருந்தும் பிரதிகா ராவலின் ஸ்டிரைக் ரேட் குறைவாக இருப்பதால், அவரது மெதுவான ஆட்டம் இந்தியாவைப் பாதிப்பதாக பலரும் விமர்சிக்கிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கிட்டத்தட்ட எல்லா பேட்டர்களும் 100+ ஸ்டிரைக் ரேட்டில் ஆடியபோது, பிரதிகா 78 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடினார். அவர் இப்படியே தொடர்ந்து ஆடுவதால், பவர்பிளேவை இந்தியாவால் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை என்ற வாதம் வலுக்கிறது. ஆனால், திருஷ் காமினி அந்த வாதத்தை முற்றிலும் மறுக்கிறார்.
"என்னைப் பொறுத்தவரை பிரதிகாவின் செயல்பாட்டை நான் குறைசொல்லமாட்டேன். அவரது ஸ்டிரைக் ரேட் குறைவாக இருக்கிறது என்கிறார்கள். அதற்காக லிட்ச்ஃபீல்ட், ஷஃபாலி வெர்மா ஆகியோரின் ஸ்டிரைக் ரேட்டோடு ஒப்பிடுகிறார்கள். அது சரியான ஒப்பீடு கிடையாது. இதே லிட்ச்ஃபீல்ட், இந்த அணுகுமுறையைக் கொண்டு 10 போட்டிகளில் மூன்றில் பெரிய இன்னிங்ஸ் ஆடுவார். ஷஃபாலியும் அப்படித்தான். ஆனால், ஓப்பனரைப் பொறுத்தவரை நான் பிரதானப்படுத்துவது சீரான ஆட்டத்தைத்தான். பிரதிகா அந்த சீரான செயல்பாட்டைக் கொடுத்துவருகிறார். எந்தவித சூழ்நிலையிலும் ஒரு நிலைத்தன்மையைக் கொடுக்கிறார். ஸ்மிரிதி - பிரதிகா தொடக்க ஜோடி கடந்த ஓராண்டில் பல சாதனைகளைப் படைத்திருக்கிறது. அப்படியொரு தொடக்க ஜோடியை மாற்றமாட்டேன். விமர்சிக்கவும் மாட்டேன்" என்று கூறினார் அவர்.
இந்தியாவின் சரிவுக்குக் காரணமாக அவர் சொல்லும் இன்னொரு விஷயம் ஆறாவது பௌலிங் ஆப்ஷன் இல்லாதது. வெறும் 5 பிரதான பௌலர்களோடு போவது இந்தியாவுக்குப் பாதகமாக அமைந்துவிட்டது என்று கூறுகிறார் அவர்.
"கடந்த இரண்டு போட்டிகளிலுமே நல்ல ஸ்கோரை டிஃபண்ட் செய்ய முடியாமல் இந்திய அணி தோற்றிருக்கிறது. கேப்டனுக்கு ஆறாவது பௌலிங் ஆப்ஷன் இல்லாததன் விளைவு இது. நீண்ட பேட்டிங் ஆர்டர் இருக்கவேண்டும் என்பதால் 5 பிரதான பௌலிங் ஆப்ஷன்களோடு மட்டும் இந்திய அணி களமிறங்கிக்கொண்டிருக்கிறது. அதுவே இப்போது பந்துவீச்சை பாதித்திருக்கிறது. ஆனால், ஒரு பேட்டருக்குப் பதிலாக அருந்ததி ரெட்டி அல்லது ராதா யாதவ் இருவரில் ஒருவரைக் களமிறக்கினால் அதுவும் கூட அவர்களின் பேட்டிங்குக்கு உதவிகரமாகத்தான் இருக்கும். அவர்களும் இந்திய அணி எதிர்பார்க்கும் அந்த கூடுதல் 20-30 ரன்களை எடுக்கக்கூடியவர்களே.
அதுமட்டுமல்லாமல் இருவரும் நல்ல ஃபீல்டர்கள் வேறு. அதனால் இந்திய அணி நீண்ட பேட்டிங் ஆர்டருக்காக பந்துவீச்சை தியாகம் செய்யக்கூடாது" என்று கூறினார் திருஷ் காமினி. எட்டாவது விக்கெட் வரை பேட்டிங் வேண்டும் என்பதால், 2 பௌலர்கள், 3 ஆல்ரவுண்டர்களுடன் இந்தத் தொடரில் ஆடிக்கொண்டிருக்கிறது இந்தியா!
ஆறாவது பௌலர் இல்லாததைப் பெரிய குறையாகக் கூறும் அவர், விளையாடும் மற்ற பௌலர்களும் இன்னும் தங்கள் செயல்பாட்டை மேம்படுத்தவேண்டும் என்றும் குறிப்பிட்டார். "இந்திய பௌலர்களின் திட்டமிடலும் கூட இன்னும் சிறப்பாக இருக்கவேண்டும். அவர்கள் ஃபீல்டிங்குக்கு ஏற்ற பந்துகளை வீசவில்லை. அதனால் ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு பௌண்டரிகள் எளிதாக வந்தன. சீரான இடைவெளியில் தவறான பந்துகளும், அதன்மூலம் பௌண்டரிகளும் கிடைத்ததால், அவர்களாக எதையும் உற்பத்தி செய்யவேண்டிய தேவை ஏற்படவில்லை. அதனால் நெருக்கடியின்றி பேட்டிங் செய்தார்கள். இந்திய பௌலர்கள் அடுத்த போட்டிகளில் அதை சரிசெய்யவேண்டியது அவசியம்" என்றார் திருஷ்.
அடுத்த போட்டிகளில் வேறு என்ன செய்யவேண்டும்?தற்போது புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் இருக்கும் இந்திய அணி இன்னும் இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளோடு விளையாடவேண்டும். இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகள் மிகவும் முக்கியம் என்பதால், அதில் வெற்றி பெற, திருஷ் காமினி மேலே சொன்ன மாற்றங்கள் தவிர்த்து இன்னும் சில மாற்றங்களையும் இந்தியா செய்யவேண்டும். அதில் முக்கியமானது டெத் பௌலிங்.
அதுபற்றிப் பேசிய திருஷ், "டெத் பௌலிங்கில் இந்தியா சற்று தடுமாறுகிறது. ஸ்பெஷலிஸ்ட் டெத் பௌலர் இந்த அணியில் இல்லை. கிராந்தி நன்றாக வீசுவதுபோல் ஆரம்ப போட்டிகளில் தெரிந்தது. கடந்த இரண்டு போட்டிகளில் அவரும் அந்தக் கட்டத்தில் அதிக ரன்கள் கொடுத்துவிட்டார். அதேசமயம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அமஞ்சோத் நன்கு பந்துவீசினார். அவரோடு தீப்தியை அந்த இடத்தில் உபயோகப்படுத்தவேண்டும். தீப்தி அந்த இடத்தில் சிறப்பாக செயல்படக்கூடியவர். அதைப் பலமுறை செய்திருக்கிறார். ஆனால் சமீபத்திய போட்டிகளில் அவரை டெத் ஓவர்களில் அதிகம் பயன்படுத்த முடியவில்லை. அதை சரிசெய்து, தீப்தியையும், அமஞ்சோத்தையும் டெத் ஓவர்களில் பயன்படுத்துவது நல்ல முடிவாக இருக்கும்" என்று கூறினார்.
என்னதான் இந்தியா அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்திருந்தாலும், அரையிறுதி வாய்ப்பு பற்றி நாம் பயப்படத்தேவையில்லை என்று நம்பிக்கையும் கொடுக்கிறார். "அரையிறுதி பற்றி இந்தியா கவலைப்படவேண்டிய அவசியமே இல்லை. இரண்டு தோல்விகள் ஏற்படுவது சகஜம் தான். இன்னும் அரையிறுதிக்குள் செல்ல இந்தியாவுக்கு 80 சதவிகித வாய்ப்பு இருப்பதாகவே நான் நினைக்கிறேன். போக, நாம் ஆஸ்திரேலியாவை ஏற்கெனவே சந்தித்துவிட்டோம். இன்னும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் ஆஸ்திரேலியாவோடு மோதவேண்டும். தென்னாப்பிரிக்காவோடு ஒப்பிட்டால் இந்தியாவின் நெட் ரன் ரேட் மிகவும் சிறப்பாக இருக்கிறது. அவர்களுக்கு இன்னும் நெருக்கடி அதிகமாகவே இருக்கும். அதனால் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறுவது உறுதி" என்று நம்பிக்கையளிக்கிறார் திருஷ் காமினி.
இந்திய அணி தங்களது அடுத்த போட்டியில் வரும் 19ம் தேதி இங்கிலாந்தை சந்திக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு