தீபாவளி நாளில் “பிரியாணி புயல்” ... 250 கோடி ரூபாய் விற்பனை எதிர்பார்ப்பு!
Dinamaalai October 19, 2025 12:48 PM

 

புரட்டாசி மாதம் நேற்றுடன் முடிவடைந்தது.  அக்டோபர் 20ம் தேதி  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகமெங்கும் “கறி விருந்து” வெகுவாக தயார் செய்யப்படுகிறது. இதனால் இந்தாண்டு தீபாவளி நாளில் மட்டும் பிரியாணி விற்பனை ரூ.250 கோடியை தாண்டும் என மதிப்பிடப்படுகிறது.

தமிழகத்தில் தீபாவளி என்றாலே இனிப்பு, பட்டாசு, புதிய ஆடை மட்டுமல்ல — கறி விருந்தும் அதன் ஒரு அவசியமான பகுதியாகும். காலையில் இட்லி, ஆட்டுக்கறி குழம்பு, மதியம் சிக்கன் அல்லது மீன் வறுவல், மட்டன் சுக்கா என விருந்து போடுவது வழக்கம். இதனிடையே பலர் வீட்டிலேயே பிரியாணி செய்து சாப்பிடுவதற்குப் பதிலாக, உணவகங்களில் இருந்து ஆர்டர் செய்வதையே விரும்பி வருகின்றனர்.

சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் பிரியாணி ரசிகர்கள் பெருகியுள்ள நிலையில், தற்போது பல உணவகங்கள் தீபாவளிக்காகவே சிறப்பு “பிரியாணி பாக்கேஜ்கள்” வெளியிட்டுள்ளன. சென்னையில் பெரும்பாலும் பாஸ்மதி அரிசி பிரியாணி பிரபலமானது; அதேசமயம் பிற மாவட்டங்களில் சீரக சம்பா அரிசி பிரியாணி தான் அதிக வரவேற்பைப் பெறுகிறது. 

வீட்டில் தயாரிக்கும் பிரியாணிக்கும்  ஹோட்டல் பிரியாணிக்கும் இடையிலான சுவை வித்தியாசம் காரணமாக, பல குடும்பங்கள் முன்கூட்டியே 1 முதல் 2 கிலோ வரையிலான பிரியாணி ஆர்டர்களை பதிவு செய்து வருகின்றனர்.சமீபத்திய தரவுகளின்படி, சென்னையில் மட்டும் ஆண்டுக்கு சுமார் ரூ.5,500 கோடியும், தமிழகமெங்கும் ரூ.11,000 கோடியும் மதிப்பிலான பிரியாணி விற்பனை நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் முழுவதும் சைவ உணவுகள் உட்கொண்ட மக்கள், தீபாவளி நாளில் அசைவ விருந்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதால், இந்த ஆண்டின் தீபாவளி பிரியாணி விற்பனை சாதனையை உருவாக்கும் என உணவக உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.