இன்றைய பரபரப்பான வாழ்க்கைமுறையில் பலருக்கும் சாப்பிட நேரமே இல்லை. அலுவலகம், வேலை, பயணம் என அலைந்து கொண்டிருக்கும் நிலையில், பலர் நின்றுகொண்டே சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது. ஆனால் இது ஒரு சிறிய பழக்கமாக தோன்றினாலும், நம் உடலின் செரிமான அமைப்புக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை.
நம் உடல் ஆரோக்கியத்தில் முதல் படியாக நாம் எடுத்துக் கொள்கிற உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. அதையும் சரியான முறையில் எடுத்துக்கொள்வது அவசியம். ஆனால் தினமும் நின்று கொண்டே சாப்பிடுவது, செரிமான மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டை பாதிக்கக்கூடும்.
நீங்கள் நின்ற நிலையில் சாப்பிடும்போது, புவியின் ஈர்ப்பு விசை காரணமாக உடலில் இரத்தம் பெரும்பாலும் கால்களில் தேங்கிக் கொள்கிறது. இதனால் செரிமான மண்டலத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைந்து விடும். இதன் விளைவாக உணவு முழுமையாக செரிக்காது; வயிற்று வீக்கம், வாயு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் தோன்றும்.
மேலும் நின்றபடியே சாப்பிடும் போது, நாம் இயல்பாகவே வேகமாக சாப்பிடுகிறோம். அதனால் உணவுடன் அதிகப்படியான காற்றையும் விழுங்குகிறோம். இது வாயு தொல்லை, அசெளகரியம் போன்றவற்றை அதிகரிக்கிறது.
அதுமட்டுமின்றி உணவை சரியாக மென்று சாப்பிடாவிட்டால், வயிற்று பிடிப்பு மற்றும் செரிமான சிரமம் ஏற்படும். உணவு முழுமையாக உடையாது என்பதால், உடல் ஆற்றல் பெறவும் தாமதமாகும். எனவே உணவை மெதுவாகவும், நன்கு மென்றும் சாப்பிடுவது செரிமானத்திற்கு மிக முக்கியம்.
நின்று சாப்பிடுவதால் வயிற்றில் உப்புசம் ஏற்படலாம். குறிப்பாக கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் வீக்கம் மற்றும் வாயு பிரச்சனையை அதிகரிக்கும். ஆனால் சில நேரங்களில், அமில ரிஃப்ளக்ஸ் (acid reflux) பிரச்சனை உள்ளவர்களுக்கு நின்று சாப்பிடுவது சிறிதளவு நன்மை தரக்கூடும். காரணம், நின்றபோது வயிற்றில் அழுத்தம் குறையும்; இதனால் அமிலம் மேலே செல்வதற்கான வாய்ப்பு குறையும். மேலும், இத்தகையவர்கள் இடது புறமாக சாய்ந்து தூங்கினால் அந்த பிரச்சனையும் தணியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
மாறாக, உட்கார்ந்த நிலையில் சாப்பிடுவது உடலின் இயல்பான செரிமான செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. குடலில் உணவு சுலபமாக நகர்த்தப்படுவதோடு, மூச்சுத்திணறல் அபாயம் குறையும். அதேசமயம் மெதுவாகவும், கவனத்துடன் சாப்பிடுவதால் உணவு சரியாக செரிமானம் ஆகி, உடல் ஆரோக்கியம் இயல்பாக மேம்படும்.
எனவே, உட்கார்ந்து அமைதியாக சாப்பிடும் பழக்கம் — ஒரு சிறிய மாற்றம் தான் என்றாலும் — நீண்ட கால ஆரோக்கியத்துக்கு மிகப் பெரிய பலனை தரும் என்பதை மறந்துவிடாதீர்கள்.