வெறும் 60 ரூபாய்க்கு இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் ஆட்டத்தை பார்க்கலாம்!
Seithipunal Tamil October 21, 2025 09:48 AM

கொல்கத்தாவில் நடைபெறவுள்ள இந்தியா–தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டிக்கான குறைந்தபட்ச நுழைவுச்சீட்டு விலை ரூ.60 என பெங்கால் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் நவம்பர் 14ஆம் தேதி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

இதற்கான நுழைவுச்சீட்டு விலை ஒவ்வொரு நாளுக்கும் ரூ.60 முதல் ரூ.250 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், ஐந்து நாள் டெஸ்டிற்கான மொத்த விலை ரூ.300 முதல் ரூ.1,250 வரை இருக்கும். டிக்கெட் விற்பனை இன்று (அக்டோபர் 20) மதியம் 12 மணி முதல் *District* செயலி வழியாக ஆன்லைனில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வட்டாரங்களில், இந்த முறை ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாததால் ரசிகர்களை ஈர்க்கும் நோக்கில் டிக்கெட் விலை குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்ற தென்னாப்பிரிக்க அணி தற்போது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், இந்த தொடர் இந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.