பெங்களூரு பசவனகுடி பகுதியில் உள்ள பி.எம்.எஸ். என்ஜினீயரிங் கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வருகிற 22 வயது பெண் மாணவியிடம், அதே கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்த ஜீவன் கவுடா (21 வயது) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 10ஆம் தேதி காலை, வழக்கம்போல் கல்லூரிக்கு வந்த பெண் மாணவியை ஜீவன் கவுடா சந்தித்து, மதியம் சில பொருட்கள் பெறவேண்டும் என கூறி சந்திக்க அழைத்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில், மதிய உணவு இடைவேளையில் 1.30 மணியளவில் வகுப்பறை கட்டிடத்தின் தரைத்தளத்தில் மாணவியை மீண்டும் சந்தித்தவர், 7வது மாடியில் உள்ள கட்டிடக்கலை துறை அருகே வரும்படி அழைத்துள்ளார்.
அதன்படி மாணவி 7வது மாடிக்கு சென்று சந்தித்த போது, ஜீவன் கவுடா திடீரென முத்தமிட முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. தன்னைக் கட்டாயமாக முத்தமிட்டதைத் தொடர்ந்து மாணவி அங்கிருந்து தப்பிக்க லிப்டில் சென்றதாகவும், 6வது மாடியில் வெளியேறியபோது, படிகள் வழியாக வந்த ஜீவன் கவுடா மாணவியை ஆண்கள் கழிவறைக்கு இழுத்து தள்ளி, உள்ளே பூட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும், மாணவி செல்போன் மூலம் தோழிகளிடம் தொடர்பு கொள்ள முயன்ற போதும், அவர் கைப்பேசியை பறித்துக் கொண்டார்.
இந்த நிலையில், ஜீவன் கவுடா அந்த மாணவியிடம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவரது செல்போனை தூக்கி எறிந்துவிட்டு தப்பியோடியுள்ளார். இந்த கொடூர சம்பவம் மதியம் 1.30 மணி முதல் 1.50 மணிக்குள் நடைபெற்றுள்ளது.
வன்முறை காரணமாக அதிர்ச்சியடைந்த மாணவி, தன்னுடைய தோழிகளிடம் முற்றிலும் மனச்சோர்வுடன் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். தோழிகள் பெற்றோரிடம் தெரிவிக்கும்படி அறிவுறுத்தினர். ஆனால், பயம் மற்றும் சமூக அவமானம் காரணமாக மாணவி சில நாள்கள் இயலாமையுடன் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி மாணவி பெற்றோரிடம் தன்னுடன் நடந்த கொடுமையை கூறியதையடுத்து, அவர்கள் அனுமந்தநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜீவன் கவுடாவை கைது செய்தனர். இந்த சம்பவம் பெற்றோர், மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் மற்றும் பெங்களூரு கல்வி வட்டாரத்தில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது