சாலைகள், தெருக்களில் சாதிப்பெயர்களை நீக்க மதுரை ஐகோர்ட்டு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமீபத்தில் தமிழகத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் மற்றும் பிற பொது நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவது தொடர்பாக தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.இந்தநிலையில் மதுரை மேல அனுப்பானடி பகுதியை சேர்ந்த பரமசிவம் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்,
இத்தனை ஆண்டுகளாக தெருக்கள், சாலைகளில் சாதி பெயர்கள் இருப்பதால் பிரச்சினை ஏற்பட்டதாக இதுவரை எந்த புகாரும் இல்லை. வருகிற சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து ஆளுங்கட்சி, மக்களிடையே பகைமையை ஊக்குவிக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தெருக்கள், சாலைகளின் பெயர்களை மாற்றுவதால் அப்பகுதியில் வசிப்பவர்கள் இருப்பிட சான்றுகளில் முகவரியை பயன்படுத்துவதில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும். எனவே பெயர்களை நீக்குவதற்கு வழிவகை செய்யும் அரசாணையை ரத்து செய்யவேண்டும், என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதிகள், சாலைகள், தெருக்களில் உள்ள பெயர்களை மாற்றுவது சம்பந்தமாக கள ஆய்வு நடத்தலாம். இந்த வழக்கில் இறுதி முடிவு எடுக்கும் வரை பழைய பெயர்களை நீக்குவது, புதிய பெயர்களை அமல்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது எனவும், இந்த வழக்கு குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் எனவும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.