நாங்க அமெரிக்காவையே ஓட ஓட விரட்டினவங்க.. எங்கிட்டயா மோதுற.. நீ எங்களை தொட்டிருக்க கூடாது.. தொட்டவனை நாங்க விட்டதில்லை.. பாகிஸ்தானை எச்சரிக்கும் ஆப்கானிஸ்தான்.. சோத்துக்கே வழியில்லாத பாகிஸ்தானுக்கு இதெல்லாம் தேவையா?
Tamil Minutes October 19, 2025 05:48 AM

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான சமீபத்திய பதட்டங்கள் குறித்து அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை தாக்கியது ’நூற்றாண்டின் தவறு’ என்று ஆப்கானிஸ்தானை நன்கு அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

ஆப்கானிஸ்தானியர்கள் தங்கள் இனத்தின் பெருமையும் கர்வமும் கொண்டவர்கள். நீங்கள் அவர்களுடன் நண்பர்களாக இருந்தால், உங்களுக்காக உயிரையே கொடுக்க தயங்க மாட்டார்கள். ஆனால், நீங்கள் எதிரிகளாக போனால், நீங்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பழிவாங்கும் குணத்துடன் எதிர்த்து போராடுவார்கள்.

வரலாற்றில், ஆப்கானிஸ்தானின் இந்த குணம் பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், சோவியத் யூனியன், மற்றும் சமீபத்தில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் என எந்தவொரு உலக வல்லரசாலும் அவர்களை முழுமையாக அடக்க முடியவில்லை. அமெரிக்காவையே ஓட ஓட புறமுதுகிட்டு ஓட வைத்தவர்கள் ஆப்கானிஸ்தானியர்கள்

இந்த நிலையில் நேட்டோவே சாதிக்க முடியாத நிலையில், பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலவீனமான பாகிஸ்தானால் ஆப்கானிஸ்தானை ஒரு இன்ஸ் கூட எதுவும் செய்ய முடியாது. பாகிஸ்தான் தனது 5 லட்சம் இராணுவ பலம், அணு ஆயுதங்கள் மற்றும் விமான படைகளைக் கொண்டு ஆப்கானிஸ்தானில் உள்ள 1.5 லட்சம் தாலிபான்களை வென்றுவிடலாம் என்று நினைத்தால் அது மிகப்பெரிய தவறு என்கிறார் சர்வதேச அரசியல் வல்லுனர்கள்.

ஆப்கான் வீரர்கள் எதிரிகளை உள்ளே வர அனுமதித்து, பின் மலை குகைகளில் இருந்தும் நிலப்பரப்பிலிருந்தும் கொரில்லா தாக்குதல் நடத்துவார்கள். இந்த சண்டையில் பாகிஸ்தான் இராணுவத்தால் நிலைத்து நிற்க முடியாது. அமெரிக்காவுக்கே இதுதான் நடந்தது.

பாகிஸ்தான், காபூலில் விமான தாக்குதல் நடத்தி டி.டி.பி. தலைவரை கொன்றதாக அறிவித்தது. ஆனால், அவர் உயிருடன் இருப்பதை வீடியோ மூலம் உறுதி செய்ததுடன், மறுநாளே பாகிஸ்தானின் முக்கிய இராணுவ நிலைகளில் தாக்குதல் நடத்தியதன் மூலம் தாலிபான்கள் பதிலடி கொடுத்துள்ளனர். இது பாகிஸ்தானின் இராணுவ தாக்குதல் தோல்வியடைந்ததையே காட்டுகிறது.

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் அமைதி பேச்சுவார்த்தைக்காக தனது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ஐ.எஸ்.ஐ. தலைவர் உட்பட உயர் அதிகாரிகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப விசா கேட்டபோது, ஆப்கானிஸ்தான் வீசா கொடுக்க மறுத்துவிட்டது. விசா கொடுக்கவே மறுக்கும் ஒரு நாடு, நிலப்பரப்பை விட்டுக்கொடுக்கும் என்று நினைப்பது முட்டாள்தனம்.

ராவல்பிண்டியில் அமர்ந்திருக்கும் இராணுவ தளபதிகள், தரைவழி யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல், பாகிஸ்தானை மேலும் அழிவின் பாதைக்கு அழைத்து செல்கின்றனர் என்று தான் விமர்சனம் செய்யப்படுகிறது.

பாகிஸ்தான், கராச்சியில் உள்ள பஸ்தூன் மக்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி, அவர்களது கௌரவத்தின் மீது கை வைத்தால், கராச்சியில் உள்ள பஸ்தூனிகள் மொத்தமாக டி.டி.பி.க்கு ஆதரவாக திரளக்கூடும். அவ்வாறு நடந்தால், பாகிஸ்தானின் பொருளாதாரம் இயங்க உதவும் கராச்சி துறைமுகம் முடங்கும் அபாயம் உள்ளது.

டி.டி.பி. இப்போது கைபர் பக்துன்வா-வில் இருந்து நகர்ந்து, தெற்கு பஞ்சாப் வரை ஊடுருவியுள்ளது. ராஜன்பூர், முல்தான், லாகூர், ராவல்பிண்டி போன்ற முக்கியமான நகரங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. சமீபத்திய மோதல்களில் 300-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், சுமார் 100-க்கும் மேற்பட்ட தாலிபான் வீரர்கள் பலியானதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாலிபான்கள் சிறைபிடித்த பாகிஸ்தான் வீரர்களின் சீருடைகளை களைந்து, முச்சந்தியில் புகைப்படங்களை எடுத்து பரப்புவதன் மூலம் உளவியல் போரில் தெளிவாக செயல்படுகிறார்கள். 1971-ல் 93,000 வீரர்கள் சரணடைந்த பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது. பாகிஸ்தான் இராணுவ வீரர்களுக்குள்ளேயே இந்த போரில் மிகப்பெரிய சலிப்பும் விரக்தியும் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், “ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் இந்தியாவிடம் பணம் பெற்றுக்கொண்டு, இந்தியாவின் தூண்டுதலின் பேரில் பாகிஸ்தானுக்கு எதிராக போரிடுகிறார்கள்” என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியா தனது மேற்கு எல்லையில் இருந்து பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைக்கு மூன்று பிரிகேட் படைப்பிரிவுகளை நகர்த்தி, இருமுனை போருக்கு தயாராவது போன்ற ஒரு தோற்றத்தை பாகிஸ்தான் இராணுவம் உருவாக்க முயல்கிறது.

மொத்தத்தில் அயூப் கான், யாஹ்யா கான், ஜியாவுல் ஹக், மற்றும் முஷரஃப் ஆகிய நான்கு இராணுவ ஜெனரல்கள் பாகிஸ்தான் அரசியலில் இல்லாமல் இருந்திருந்தால், அந்த நாடு உருப்பட்டிருக்கும் என்றும், அவர்களின் அதே வழியில் தான் தற்போது அசீம் முனீர் பயணிப்பதாகவும், பாகிஸ்தான் ஒரு அழிவின் விளிம்பில் இருப்பதாகவும் உலக அரசியல் வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர்.

Bala Siva

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

Author: Bala Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.