Bison collection : மாரி செல்வராஜின் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து உருவாகியுள்ள பைசன் திரைப்படம் நேற்று தியேட்டர்களில் வெளியானது.துருவ் ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்கள் அவருக்கு பெயரை வாங்கி கொடுக்கவில்லை. எனவே பைசன் திரைப்படத்திற்கு கடந்த மூன்று வருடங்களாக கடுமையான உழைப்பை போட்டிருந்தார் துருவ்.
தென் மாவட்டத்தில் வசிக்கும் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்வில் நடந்த நிஜ சம்பவங்களை அடிப்படையாக வைத்து பைசன் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த படத்திற்காக சில வருடங்கள் மணத்தி கணேசன் உட்பட பலரிடமும் கபடி பயிற்சி எடுத்தார் துருவ். இதுதான் என் முதல் படம் என புரமோஷன் நிகழ்ச்சியில் பேசினார்.
வழக்கமாக சாதிய ஒடுக்கு முறைகளை தனது திரைப்படங்களில் அதிகம் காட்டும் மாரி செல்வராஜ் இந்த படத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு இளைஞன் கபடி போட்டியில் சாதிக்க நினைக்கும் போது அதற்கு தடையாக என்னென்ன பிரச்சனைகள் வருகிறது என்பதை காட்டியிருக்கிறார். படம் பார்த்த பலரும் துருவின் நடிப்பையும், மாரி செல்வராஜையும் பாராட்டி வருகிறார்கள்.
அதேநேரம் இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களும் வருகிறது. அதிகப்படியான கபடி விளையாட்டு காட்சிகள். மீண்டும் மீண்டும் வரும் ஒரே மாதிரியான பிளாஷ்பேக் காட்சிகள் என சில குறைகளும் இருப்பதாக ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.தென் மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்கள் பைசன் படத்தை கொண்டாடினாலும் பொதுவான ரசிகர்கள் இந்த படத்தை எப்படி வரவேற்பார்கள் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
ஒருபக்கம் தீபாவளி போன்ற கொண்டாட்ட மனநிலையில் பைசன் போன்ற சீரியஸ் சினிமாவை பார்க்க பெரும்பாலான ரசிகர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.இந்நிலையில் பைசன் திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் 2.50 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.அதேநேரம் இன்னும் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை இருப்பதால் பைசன் படம் வசூலை குவிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.