பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான உறவு முற்றிலும் முடிவுக்கு வந்துவிட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் கடுமையாக தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக இரு நாடுகளுக்கிடையேயான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தானில் சட்டவிரோதமாக தங்கி உள்ள ஆப்கானிஸ்தானியர்களை உடனடியாக நாடு கடத்தும் நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஆப்கானிஸ்தானியர்கள் அனைவரும் தங்கள் தாய்நாட்டுக்கே திரும்ப வேண்டும் எனக் கவாஜா ஆசிஃப் அறிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: “பாகிஸ்தானின் நிலமும் வளமும் 25 கோடி பாகிஸ்தானியர்களுக்கே உரியது. இனி ஆப்கானிஸ்தானுடன் எந்தவித சகாப்த உறவும் தொடராது. அரசியல் பேச்சுவார்த்தையோ, அமைதி முயற்சியோ இருக்காது. எங்கள் பிரதிநிதிகள் இனி ஆப்கானிஸ்தான் செல்வதில்லை. பயங்கரவாதம் எங்கிருந்தாலும், அதற்குரிய கடுமையான பதில் கொடுக்கப்படும்.”
அவர் மேலும், “ஆப்கானிஸ்தானியர்கள் ஒருகாலத்தில் நமது நாட்டில் பாதுகாப்பு பெற்று வாழ்ந்தனர். ஆனால், பாகிஸ்தானுக்குத் திரும்பக் கிடைத்தது பயங்கரவாதமும் சதித் திட்டங்களுமே. இந்தியாவுடன் சேர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக அவர்கள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்,” எனக் குற்றம்சாட்டினார்.
இதனுடன், இந்திய எல்லையில் ஊடுருவல் முயற்சிகள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், அதனை எதிர்கொள்ள தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். “இருமுனைப் போருக்குத் தயார் நிலையில் உள்ளோம்,” எனக் கவாஜா ஆசிஃப் எச்சரித்தார்.