சென்னை வளசரவாக்கத்தில் 5 பேருக்கு டெங்கு பாதிப்பு.. நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை..
TV9 Tamil News October 19, 2025 01:48 AM

சென்னை, அக்டோபர் 18, 2025: தமிழகத்தில் பருவமழை மாற்றங்கள் காரணமாக பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பதிவாகி வருகிறது. இதன் காரணமாக கொசு தொல்லையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் டெங்கு பாதிப்பு தமிழகத்தில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னை வளசரவாக்கம் பகுதியில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வளசரவாக்கம் பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மக்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

15,000 பேருக்கு டெங்கு பாதிப்பு:

கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் டெங்கு பாதிப்பு தொடர்பாக பேட்டி அளித்திருந்தார். அப்போது பேசிய அவர், “2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி தற்போது வரை 15,000-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று வாரங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேலும் படிக்க: மத்திய அரசுக்கு சில கேள்விகள்.. முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு ட்வீட்!

சென்னை, திருவள்ளூர், கோவை ஆகிய மூன்று மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக இருப்பதன் காரணமாக இந்த மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதே சமயம் கொசு தொல்லையை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்பை தடுக்கும் வகையில் தேவையான இடங்களில் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” என குறிப்பிட்டிருந்தார்.

சென்னை வளசரவாக்கத்தில் 5 பேருக்கு டெங்கு:

சென்னைக்கு ஏற்கனவே ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் வளசரவாக்கம் பகுதியில் மட்டும் ஐந்து பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் கொசு உற்பத்தி பகுதிகள் அதிகமாக இருப்பதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க: அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. வெளுக்கப்போகும் மழை.. வானிலை ரிப்போர்ட் இதோ..

டெங்கு என்பது கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடிய ஒரு காய்ச்சல் வகையாகும். காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, தோல் அரிப்பு ஆகியவை டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள். சிலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமல் கூட டெங்கு காய்ச்சல் ஏற்படலாம். வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கிய நிலையில், பருவகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பேரிடர் மீட்பு, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட அவைகள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பாதிப்புகளை தடுப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.