அமெரிக்கா முழுவதும் “No Kings” என்ற முழக்கத்துடன் அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடித்துள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றவாசிகளுக்கெதிரான கடுமையான நடவடிக்கைகள், அரசுத் துறைகளில் நடைபெறும் பெருமளவிலான பணிநீக்கங்கள் மற்றும் பொருளாதார கொள்கைகள் ஆகியவை பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இதன் பின்னணியில், பல இடதுசாரி மற்றும் ஜனநாயக ஆதரவு அமைப்புகள் இணைந்து அமைத்துள்ள “No Kings” கூட்டணியே இப்போராட்டத்தை ஒருங்கிணைத்தது.
இந்த அமைப்பு கடந்த ஜூன் மாதத்திலும் இதே பெயரில் நாடு முழுவதும் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தியது. தற்போது நடைபெற்ற இரண்டாவது கட்ட போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட சமூக மற்றும் தொழிற்சங்க அமைப்புகள் இணைந்துள்ளன.
இந்நிலையில் நேற்று “மன்னர்கள் வேண்டாம்” என்ற முழக்கத்துடன் 2,700 நகரங்களில் ஒரே நேரத்தில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. இதில் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றதாக “No Kings” இயக்கம் அறிவித்துள்ளது.
நியூயார்க் நகரில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் டைம்ஸ் சதுக்கத்தில் கூடினர். “மன்னர்கள் இல்லை”, “ஜனநாயகம் — சாம்ராஜ்யம் அல்ல”, “அதிகாரம் மக்களுக்கே” என எழுதிய பதாகைகள் ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.
வாஷிங்டன் டிசி, லாஸ் ஏஞ்சல்ஸ், டென்வர், சான் டியாகோ, சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ போன்ற நகரங்களிலும் அதேபோல் பெருமளவிலான மக்கள் பங்கேற்றனர்.
நோ கிங்ஸ் இயக்கம், “டிரம்ப் ஜனநாயகத்தின் அடிப்படைகளை சிதைக்க முயல்கிறார்; இதற்கு மக்கள் இனி மௌனமாய் இருக்க மாட்டார்கள்” என்று அறிவித்துள்ளது.