இந்து மதத்தில் மிக முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்படும் தீபாவளி நாளை, அக்டோபர் 20ஆம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே நாம் அனைவருக்கும் மனதிற்குள் உற்சாகம் கரைபுரண்டு ஓடும் வகையில் மிகவும் மகிழ்ச்சியான மறக்க முடியாத ஒரு நாளாக அமையும். காலையில் எண்ணெய் குளியல் தொடங்கி புத்தாடை அணிந்து, இறைவழிபாடு செய்து, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி, வாழ்த்துக்களை பகிர்ந்து, இந்த ஒரு நாளை அடுத்த ஒரு வருடம் பேசும் அளவிற்கு மாற்றி விடுவோம். விஷ்ணு பகவான் நரகாசுரனை வதம் செய்த நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்நாள் ஐப்பசி மாதம் அமாவாசையை கணக்கிட்டு கடைபிடிக்கப்படுகிறது.
இப்படியான நிலையில் 2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வருகிறது திங்கள் கிழமை என்பது சாஸ்திரப்படி சிவபெருமானுக்கு மிகவும் உரிய நாளாக பார்க்கப்படுகிறது. இந்நாளில் நாம் இறைவழிபாடு செய்ய நல்ல நேரம் எப்போது என்பதைக் காணலாம்.
Also Read: சர்க்கரை நோயால் ஸ்வீட் சாப்பிடாத கவலை போதும்.. தீபாவளிக்கு சர்க்கரை இல்லாத ஆரோக்கிய லட்டு ரெசிபி இதோ!
தேய்பிறை நாளாக இருந்தாலும் தீபாவளி வரும் நாள் சுபமுகூர்த்த தினமாகும். அன்றைய நாளில் நல்ல நேரம் காலை 9.15 முதல் 10.15 வரை உள்ளது. அதற்குள் நாம் இறை வழிபாடு செய்ய வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. ஒருவேளை பிரம்ம முகூர்த்தத்தில் நீங்கள் இறைவழிபாடு செய்பவர்களாக இருந்தால் அதனையும் மேற்கொள்ளலாம். எனினும் பிரம்ம முகூர்த்தம் என்பது தீபாவளி நாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கான காலமாக பார்க்கப்படுகிறது.
மேலும் காலையில் 7:30 மணி முதல் 9 மணி வரை ராகு காலம் இருப்பதால் இந்த நேரத்தில் எக்காரணம் கொண்டும் நாம் வழிபாட்டில் ஈடுபடக்கூடாது. சிலருக்கு காலையில் பணி காரணமாக இறை வழிபாடு செய்ய முடியாமல் போகலாம். அவர்கள் மாலையில் 4.45 மணி முதல் 5:45 மணி வரை வழிபாட்டை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: Diwali 2025: தீபாவளி நாளில் எண்ணெய் குளியல்.. நல்ல நேரம் எது?
தீபாவளி நாளில் எண்ணெய் குளியல் எடுக்கும் போது வெதுவெதுப்பான நீரில் தான் குளிக்க வேண்டும் மேலும் கங்கை நீரில் குளிப்பதற்கு ஏற்ப இரண்டு கல் உப்பை நீரில் போட்டு புனித நீராடலாம். மேலும் அன்றைய நாளில் நாம் சீகைக்காய் உபயோகிக்க வேண்டும். ஷாம்பு போன்ற பிற பொருட்களை தவிர்ப்பது நல்லது மேலும் இந்நாளில் வீட்டில் வழிபாடு முடிந்தவுடன் புத்தாடை அணிந்து பெரியவர்களிடம் ஆசி வாங்கி அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது திங்கட்கிழமை தீபாவளி வருவதால் சிவன் கோயில்கள் செய்வது இரட்டிப்பு பலன்களை கொடுக்கும் என நம்பப்படுகிறது.
(ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)