பீகார் மாநில சட்டசபைக்கு வரவிருக்கும் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. மொத்தம் 243 தொகுதிகளைக் கொண்ட இந்த தேர்தலில், முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6ஆம் தேதி வாக்களிப்பும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 11ஆம் தேதி வாக்களிப்பும் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அடுத்த மாதம் 14ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன.
தற்போது பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக இணைந்த ஆளும் கூட்டணியில் நிதிஷ் குமார் முதல்-மந்திரியாக உள்ளார். இதேவேளை, எதிர்க்கட்சிகளான ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மற்றும் காங்கிரஸ் ஆகியவை கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்ள தயாராகியுள்ளன.
இந்நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. மதுபன் தொகுதியில் மூத்த நிர்வாகி மதன் ஷாவுக்கு வேட்புமனு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சித் தலைமையினர் அவருக்கு பதிலாக சந்தோஷ் என்பவருக்கு சீட் வழங்கியுள்ளனர்.
இதையடுத்து கட்சித் தீர்மானத்தால் அதிருப்தியடைந்த மதன் ஷா இன்று ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் அவர்களின் வீட்டிற்கு சென்று எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவர் கண்ணீர் விட்டு அழுததுடன், சட்டையை கிழித்துக்கொண்டு தரையில் புரண்டு போராட்டம் செய்தார்.
மேலும், “மதுபன் தொகுதிக்கான சீட் ரூ.2.7 கோடி லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வழங்கப்படும் என்று மூத்த தலைவர் சஞ்சய் கூறியதாகவும், நான் பணம் வழங்காததால் சீட் மற்றொருவருக்கு வழங்கப்பட்டுவிட்டது” என்றும் மதன் ஷா கடும் குற்றச்சாட்டு முன்வைத்தார். மேலும் இந்த சம்பவம் பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.